பர்கீனா பாசோ என்ற ஆபிரிக்க நாட்டில் உள்ள பிரான்ஸ் தூதரகம் மீது துப்பாக்கிதாரிகளின் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அந்நாட்ட்டின் தலைநகர் வகாடூகூ-வில் துப்பாக்கிதாரிகள் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொண்ட இரட்டைத் தாக்குதலில் அங்குள்ள பிரான்ஸ் தூதரகமும், அந்நாட்டின் ராணுவத் தலைமையகமும் தாக்குதலுக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலை அடுத்து துப்பாக்கிதாரிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் எட்டு பாதுகாப்புப் படையினரும், துப்பாக்கிதாரிகள் எட்டுபேருமாக 16 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுளளது. அத்துடன் பொதுமக்கள் உள்ளிட்ட 80 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ள அதிகாரிகள் இது ஒரு பயங்கரவாதச் செயல் என்பதில் சந்தேகம் இல்லை எனத் தெரிவித்துள்ளனர். எனினும் இத்தாக்குதலை நடத்தியது யார் என்பது உடனடியாகத் தெளிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சுமார் 2 கோடி அளவுக்கு மக்கள் தொகை கொண்ட இந்த நாடு பிரான்ஸ் நாட்டின் காலனியாதிக்கத்தில் இருந்து 1960ம் ஆண்டு விடுதலை பெற்ற போதும் பிரான்சுடன் நல்ல நட்பில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.