குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்
அண்மையில் கிளிநொச்சியில் இருந்து சுமார் 150க்கும் அதிகமான காவல்துறை உத்தியோகத்தர்கள் இடமாற்றம் பெற்று தென்னிலங்கைக்குச் சென்றனர். இவ்வாறு இடமாற்றம் பெற்றுச் செல்லும் வேளை, ஒரு காவல்துறை உத்தியோகத்தர் தனது கடைசி நிமிடங்களை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் பகிர்ந்துள்ளார்.
அவர்களின் பிள்ளைகள் விடுவிக்கப்படவேண்டும் என்றும் இதற்காக போராடும் உறவுகளை தான் மிகவும் நேசிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளர். அந்த மக்களுடன் சிற்றுண்டி ஒன்றை பகிர்ந்து அவர்களுடன் உரையாடிச் செல்லுவது தனது மனதிற்கு ஆறுதலான – அர்த்தமான விடயமாக காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
அந்த மக்களுடன் அன்பாக பேசி அவர்களின் கதைகளையும் துயரங்களையும் கேட்டுச்சென்ற குறித்த காவல்துறை உத்தியோகத்தர், குறித்த மக்களின் போராட்டத்திற்கு தன்னாலான ஒத்துழைப்புக்களை தேவையான சந்தர்ப்பத்தில் வழங்குவேன் என்றும் தெரிவித்துள்ளார். தனது பணிக்கோ, மக்களின் போராட்டத்திற்கோ ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் அவர் தனது பெயர் மற்றும் புகைப்படத்தை வெளியிட அனுமதி மறுத்திருந்தார்.
இந்த மக்களை ஒடுக்குவதிலும் தமது இராணுவம் மற்றும் அரசு இழைத்த குற்றங்களை மறைப்பதிலும் இலங்கை பொலிஸூம் இராணுவமும் முன் நிற்கும் நிலையில் இந்த உத்தியோகத்தரின் செயற்பாடு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக போராட்டத்தில் ஈடுபடும் உறவுகள் தெரிவித்தனர்.