Home இலங்கை கானல் நீராகியிருக்கும் கூட்டமைப்பின் நம்பிக்கை – பி.மாணிக்கவாசகம்…

கானல் நீராகியிருக்கும் கூட்டமைப்பின் நம்பிக்கை – பி.மாணிக்கவாசகம்…

by admin

மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்பார்கள். அதுபோல, உள்ளுராட்சித் தேர்தல் முடிந்த பின்னரும், தேர்தல் காலத்து, எதிரணிகள் மீதான கருத்துப் பரப்புரைகள் இன்னும் முடிவடையவில்லை. கட்சி அரசியலை முதன்மைப்படுத்தும் போக்கில் தமிழ் அரசியல்வாதிகள் மிகவும் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றார்கள்.

உள்ளுராட்சி சபைகளுக்குரிய பிரச்சினைகளிலும் பார்க்க, தேசிய மட்டத்திலான பிரச்சினைளுக்கே இந்தத் தேர்தலில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், இந்த கலப்புத் தேர்தல் முறையில் முன்னிலை பெற்றிருந்த கட்சிகளை முதன்மைப்படுத்தும் போக்கில் இருந்து கட்சித் தலைவர்களும், அரசியல்வாதிகளும் இன்னும் விடுபடவில்லை.

இதனால், நடந்து முடிந்தது உள்ளுராட்சித் தேர்தல்தானேயொழிய, நாடாளுமன்றத் தேர்தல் அல்ல என்ற யதார்த்தத்தை அரசியல்வாதிகள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது.

உள்ளுராட்சித் தேர்தல் என்பது அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்த போதிலும், அந்த சபைகளின் செயற்பாடுகள் அரசியலுக்கு அப்பாற்பட்டவை. அதனால்தான், சபைத்தலைவருக்கான வேட்பாளர் என்ற தகுதியில் தேர்தலில் போட்டியிடுகின்ற முறை தவிர்க்கப்பட்டள்ளது. எனினும் மாநகரசபைகள், மற்றும் நகரசவைகளில் மேயர் பதவிக்கென்றும், தலைவர் பதவிக்கென்றும் பெயர்கள் குறிப்பிடப்பட்டு, வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்த வேடிக்கையான நிலைமை காணப்பட்டது.

தேர்தல் முடிந்த பின்னர், தமிழரசுக் கட்சியினர் தேர்தலில் வெற்றிபெற்ற தமது உறுப்பினர்களைக் கூட்டி, சபைகளுக்கான தலைவர்களுடைய பெயர்களையும் குறிப்பிட்டு ஆட்களைத் தெரிவு செய்திருப்பது பற்றிய தகவல்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. இது இன்னுமொரு வேடிக்கையான நிலைப்பாடாகும்.

உள்ளுராட்சித் தேர்தலில் சபை ஒன்றிற்கான போட்டியில் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற கட்சிக்கே தலைவர் மற்றும் உபதலைவரை நியமிக்கும் தகுதி உண்டு. இது தேர்தல் சட்ட நியதி.

உள்ளுராட்சித் தேர்தல் என்பது மாகாண சபைத் தேர்தலைப் போன்றதல்ல. மாகணசபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்கென வேட்பளாரை நியமித்து, அதன் அடிப்படையில் வெற்றி பெற்றவர் முதலமைச்சராக வரக் கூடிய வாய்ப்பு உண்டு. ஆனால், உள்ளுராட்சித் தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற அனைவருமே உறுப்பினர்கள் என்ற அந்தஸ்தில் மட்டுமே சபைக்குள் பிரவேசிக்க முடியும்.

அவ்வாறு அறுதிப் பெரும்பான்மை பெறாத சபைகளில், தெரிவு செய்யப்படுகின்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமக்குரிய ஒரு தலைவரையும், உபதலைவரையும் தெரிவு செய்து கொண்டு சபை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதும் நியதி.

நிலைமை இவ்வாறிருக்க அறுதிப் பெரும்பான்மையைப் பெறாத சபைகளில், கூடிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட கட்சிகள் தங்களுக்கே ஆட்சி அமைக்கும் உரிமை உண்டு என்ற ரீதியில் தமது உறுப்பினர்களைக் கூட்டி வைத்து, கட்சிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் வெற்றித் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றன. இது, உள்ளுராட்சி சபைகளின் நடைமுறைகளுக்கு முரணான – கட்சி உறுப்பினர்களையும், பொது மக்களையும் தவறாக வழிநடத்துகின்ற -போக்காகும். அது மட்டுமல்லாமல் மிகமோசமான யுத்த நிலைமைகளுக்குப் பின்னரான அரசியல் கள நிலைமைகளையும், பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளையும் கருத்தில் கொள்ளாத போலித்தனமானதோர் அரசியல் போக்கு என்றுகூடச் சொல்லலாம்.

உள்ளுராட்சி சபைகளின் சட்டரீதியான செயற்பாடுகள் நடைமுறைகளுக்கு அப்பால், உள்ளுராட்சித் தேர்தல் நாட்டில் ஏற்படுத்தியுள்ள அரசியல் நிலைமைகளை உணர்ந்து அதற்கேற்ற வகையில் செயற்பட வேண்டும் என்ற கள யதார்த்தத்தை வேண்டுமென்றே புறந்தள்ளுகின்ற நடவடிக்கையாகவே இதனை நோக்க வேண்டியிருக்கின்றது.

தேர்தலுக்கு முன்னும் பின்னும்

உள்ளுராட்சித் தேர்தலுக்கு முன்னர், தமிழ் மக்களுடைய அரசியல் பலம் ஓரளவு சக்தி மிக்கதாகவே காணப்பட்டது என்று கூறலாம். ஐக்கிய தேசிய கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்திருந்த கலப்பு ஆட்சியின் இருப்புக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முண்டு கொடுத்திருந்தது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவின் மூலமே, 2015 ஆம் ஆண்டு, இந்த கூட்டு ஆட்சி உருவாகியது. அது தொடர்ந்து ஆட்சி செலுத்துவதற்கும் கூட்டமைப்பு தன்னாலான உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்கி வந்தது.

ஆனால், ஒரே தினத்தில் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட உள்ளுராட்சித் தேர்தல் இந்த அரசியல் நிலைமையைப் புரட்டிப் போட்டிருக்கின்றது. கூட்டாட்சியை ஆட்டம் காண வைத்து, மூன்று வருடங்களுக்கு முன்னர் தூக்கி எறியப்பட்ட மகிந்த ராஜபக்ச அணியினரை ஆட்சி அரியணையை நோக்கி நகர்வதற்கான சூழலை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆட்சியாளர்களைப் புறந்தள்ளி, கூட்டாட்சியின் அரசியல் இருப்பையே, சிங்கள மக்கள் இந்தத் தேர்தலின் மூலம் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கின்றார்கள்.

இதனால், நிபந்தனையற்ற முறையில் வெறும் நம்பிக்கையின் அடிப்படையில், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவும், தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணவும் முடியும் என்ற கூட்டமைப்பின் அரசியல் இராஜதந்திரம் இப்போது தவிடு பொடியாகியுள்ளது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் மூலம், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே, கூட்டு அரசாங்கத்தின் மீதான சிங்கள மக்களின் நம்பிக்கையைச் சிதைப்பதற்கான, ஒரு தேர்தல் பிரசார உத்தியாக, மகிந்த ராஜபக்சவினால் பயன்படுத்தப்பட்டிருந்தது. மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுனவை முன்னிலைப்படுத்தி, அதிகாரத்தில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும், ஐக்கிய தேசிய கட்சியையும் சிங்கள மக்கள் புறந்தள்ளியிருக்கின்றார்கள். இதனால், உன்னால்தான் நான் கெட்டேன், என்னால் தான் நீ கெட்டாய் என்ற கையறு நிலை அரசியல் கட்சிகளுக்கு உருவாகியிருக்கின்றது.

நிபந்தனையற்ற முறையில் கூட்டாட்சிக்கு ஆதரவு வழங்கி, அரச மட்டத்தில் செல்வாக்கு பெற்றிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தேர்தலின் பின்னர் இப்போது அரசியல் ரீதியாகப் பலமிழந்திருக்கின்றது. கிங் மேக்கர் என்ற அரசியல் நிலையில் இருந்து அது சரிந்து போய் இருக்கின்றது. ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் நாட்டின் அரசியல் வரலாற்றிலேயே முதன் முறையாக இணைந்து ஆட்சியமைத்ததன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான பொன்னான சந்தர்ப்பம் வாய்த்திருக்கின்றது என்ற அரசியல் ரீதியான கூட்டமைப்பின் நம்பிக்கை கானல் நீராகியுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் படிப்படியாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் அதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற போக்கிலேயே கூட்டமைப்பின் தலைமை செயற்பட்டிருந்தது. தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தால் அல்லது அதனை அவசரப்படுத்தினால், அரசுக்கு எதிரான மகிந்த அணியினர் இனவாதத்தைப் பரப்பி, அரசாங்கத்தைக் கவிழ்த்துவிடுவார்கள் என கூட்டமைப்பு பகிரங்கமாகவே அச்சம் கொண்டிருந்தது.

இதனால், நிபந்தனையற்ற ஆதரவின் மூலம் நல்லாட்சி உருவாகுவதற்கு உறுதுணை புரிந்த போதிலும், கடந்த மூன்று ஆண்டுகளில் அந்த அரசாங்கத்தைப் பயன்படுத்தி, அதன் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, அது தவறிவிட்டது. அரசியல் தீர்வுக்கு அப்பால், தீர்வு கண்டிருக்கக் கூடிய அன்றாடப் பிரச்சினைகளுக்குக்கூட, தீர்வு காணும் சந்தர்ப்பம் இதன் மூலம் கை நழுவ விடப்பட்டுள்ளது. ஆயுத ரீதியாகப் பலம் பெற்றிருந்த விடுதலைப் புலிகள் உட்பட தமிழ்த் தலைமைகள், கடந்த காலங்களில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குக் கிடைத்த சந்தர்ப்பங்களைத் தவறவிட்டிருக்கின்றன என்ற பழிச்சொல்லிற்கு இப்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையும் ஆளாகியிருக்கின்றது.

தேசிய மட்டத்தில் மட்டுமல்லாமல் தமிழ் மக்கள் மத்தியிலும் கூட்டமைப்பின் தலைமை மூன்று வருடங்களுக்கு முன்னர் கொண்டிருந்த செல்வாக்கை இழந்திருப்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கின்றன. கூட்டமைப்பின் தலைமை அரசியலில் சரிவடையத் தொடங்கியிருப்பதன் உறுதியான சமிக்ஞையாக, அரசியல் ஆய்வளார்கள் இதனைச் சுட்டிக்காட்டியிருக்கின்றார் கள். ஆனாலும், இந்த யதார்த்த நிலைமையை உணர்ந்து, மக்கள் மத்தியிலான தனது அரசியல் செல்வாக்கை நிமிர்த்துவதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, தமிழரசுக் கட்சி மட்டுமல்ல. தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஏனைய கட்சிகளும் கட்சி அரசியலில் ஆழ்ந்து, மக்கள் நலன்களை முதன்மைப்படுத்துவதற்குத் தவறியுள்ள போக்கையே காண முடிகின்றது.

மக்களை முதன்மைப்படுத்திய அரசியலே அவசியம்

கட்சி அரசியலிலும் பார்க்க, மக்களை முதன்;மைப்படுத்திய அரசியலே அவசியம் என்பதை நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் சுட்டிக் காட்டியிருக்கின்றன. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ள தமிழரசுக் கட்சி கூட்டமைப்பைப் பலமுள்ளதோர் மக்கள் சக்தியாகக் கட்டியெழுப்பத் தவறிவிட்டது. மாறாக தமிழரசுக் கட்சியை மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க கட்சியாக வளர்த்தெடுப்பதற்கான முயற்சிகளிலேயே தீவிர கவனம் செலுத்தியிருந்தது. இதனால், கூட்டமைப்பின் ஒற்றுமையும், அதன் ஒன்றிணைந்த செயற்பாடும் பாதிக்கப்பட்டது.

அரசியல் கட்சிகள் மத்தியில் மட்டுமல்லாமல், மக்கள் மத்தியிலும்கூட மாற்றுத் தலைமை குறித்த சிந்தனை உருவாகுவதற்கு வாய்ப்பாகிப் போனது. கூட்டமைப்பில் இருந்து ஈபிஆர்எல்எவ் கட்சி வெளியேறவும், அதனால் கூட்டமைப்பில் பிளவு ஏற்படவும் நேர்ந்தது. இது கால வரையிலும் இறுக்கமாகக் கூட்டமைப்பின் வழி நடத்தலில் கட்டுண்டு கிடந்த தமிழ் மக்கள், இதனால், கூட்டமைப்பின் மீது தமக்கு ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் உள்ளுராட்சித் தேர்தலில் மாற்று கட்சிகளுக்கு வாக்களித்திருக்கின்றார்கள். இது தமிழ் அரசியலில் யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலைமையாகும்.

தமிழ் மக்கள் ஒரே தலைமையின் கீழ் அணிதிரண்டு, அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் தமது ஒற்றுமையை வெளிக்காட்ட வேண்டும் என்ற கூட்டமைப்புத் தலைமையின் கோரிக்கையை யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் தமிழ் மக்கள் உறுதியாகக் கடைப்பிடித்து வந்தார்கள். ஆனால், உனக்கல்லடி ஊருக்குத்தான் உபதேசம் என்றதுபோல, ஒற்றுமையை வலியுறுத்திய கூட்டமைப்பின் தலைமை கூட்டமைப்புக்குள் ஒற்றுமையைக் கட்டிக்காப்பதில் கவனம் செலுத்தவில்லை.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் சின்னமாகிய வீட்டுச் சின்னத்தைச் சொந்தமாகக் கொண்ட தமிழரசுக்கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் காட்டிய அரசியல் கரிசனை, தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்குரிய, உறுதியான, அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்த அரசியல் கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதில் காட்டப்படவில்லை.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இணைந்திருந்த பங்காளிக் கட்சிகளைப் புறந்தள்ளுவதிலும், தமிழரசக் கட்சியொன்றே புனிதமான அரசியல் அமைப்பு என்ற அரசியல் தோற்றத்தை உருவாக்குவதிலும், அதற்காக சந்தர்ப்பங்கள் கிடைத்த போதெல்லாம், ஏனைய கட்சிகளை எள்ளி நகையாடுவதிலுமே கூட்டமைப்பின் தலைமையினால், கவனம் செலுத்தப்பட்டது. விட்டுக் கொடுத்துச் செயற்பட்டு மக்களின் நலன்களுக்கான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளுக்குப் பதிலாக கட்சி அரசியல் சார்ந்த தன்னாதிக்கச் செயற்பாடுகளுக்கே, கூட்டமைப்பின் தலைமை முன்னுரிமை அளித்திருந்தது. இதனால் கூட்டமைப்புக்குள்ளே உள்ளக ஜனநாயகம் புறந்தள்ளப்பட்டது. தன்னிச்சையான போக்கில் காரியங்கள் முன்னெடுக்கப்பட்டன. உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு குறிப்பாக அதன் தலைமைக் கட்சியாகிய தமிழரசுக் கட்சி இதன் அறுவடையாகப் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது.

ஆக, விடுதலைப்புலிகளுக்குப் பின்னர், தமிழ் மக்களின் ஒன்றிணைந்த ஓர் அரசியல் சக்தியாகப் பரிணமித்திருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, தேசிய மட்டத்திலும், தமிழ் மக்கள் மத்தியிலுமாக இரு முனைகளில் இப்போது பலவீனமடைந்திருக்கின்றது. மறுபக்கத்தில் உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் ஏனைய கட்சிகளுக்கு வாக்களித்து அவற்றைப் பலப்படுத்தியிருப்பதன் ஊடாக, தமிழ்த்தேசியத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த இறுக்கமான பிடி தளர்ந்திருப்பதையே காட்டுகின்றது.

யுத்தம் முடிவுக்கு வந்து எட்டு வருடங்கள் நிறைவடையப் போகின்றது. ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஆக்கபூர்வமான முயற்சிகள் எதுவும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. போர்க்காலத்து உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என்று வலியுறுத்தும் ஐநா மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களில் அரசியல் தீர்வும் ஓர் அம்சமாக உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும், அந்த சர்வதேச அழுத்தமும்கூட பலனளிக்கவில்லை. பொறுப்பு கூறும் விடயத்தில் இணை அனுசரணை வழங்கிய நல்லாட்சி அரசாங்கமும்கூட, சர்வதேசத்துக்கும் போக்கு காட்டுகின்றதே தவிர உறுதிமொழிகளை நிறைவேற்ற முன்வரவில்லை.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு நம்பிக்கை வைத்திருந்த நல்லாட்சி அரசாங்கத்தின் இருப்பே இப்போது கேள்வி குறிக்கு ஆளாகியிருக்கின்றது. இந்த நிலையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கு அறநெறியில் முயற்சிப்பதாகக் கூறுகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பு யார் மீது நம்பிக்கை வைத்துச் செயற்படப் போகின்றது, யாரிடம் போய் தஞ்சமடையப் போகின்றது என்பது தெரியவில்லை.

தென்னிலங்கையில் கடும்போக்குடைய அரசியல் நிலைமைகள் உருவாகியுள்ள சூழலில், உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளைப் பெரிதுபடுத்தி கட்சி அரசியல் நலன்சார்ந்து தன்முனைப்பில் தமிழ் அரசியல் கட்சிகள் செயற்பட்டுக் கொண்டிருப்பது ஆரோக்கியமானதல்ல. தேர்தல் களத்தில் சுயவெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு எதிரணி சார்ந்தவர்களைத் தாக்கியும், அரசியல் ரீதியாகத் தூற்றியும் வந்த செயற்பாடுகள், தேர்தலின் பி;ன்னர் தொடர்வது நல்லதல்ல. அரசியல் ரீதியாக எதிரணியில் இருப்பவர்களை ஜன்ம விரோதிகளைப் போல உருவகித்து, உள்ளுராட்சி சபைகளில் ஒன்றிணைந்து செயற்படமாட்டோம் என்று அரசியல் விறாப்பு பேசுவது அழகல்ல.

மக்கள் பிரதிநிதிகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைகளை மக்கள் நலன் சார்ந்து திறம்பட நிர்வகித்துச் செயற்படுவதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதேபோன்று அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும், தெற்கில் உருவாகி வருகின்ற தமிழ் மக்களுக்கு சாதகமில்லாத அரசியல் சூழ்நிலையைக் கவனத்திற்கொண்டு, தமக்குள்ளான வேறுபாடுகளையும் அரசியல் கசப்புணர்வுகளையும் தூக்கி எறிந்துவிட்டு, தமிழ் மக்களின் அரசியல் நலன்களைக் கருத்திற் கொண்டு புதியதோர் அரசியல் பாதையில் காலடி எடுத்து வைப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

தமிழ் மக்களும், தமிழ் அரசியல் கட்சிகளும் இறுக்கமான ஓர் அரசியல் கட்டமைப்பில் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே, தமிழ் அரசியல் சரியான வழியில் பயணிக்க முடியும். ஒன்றிணைந்த அரசியல் செயற்பாட்டைக் கைவிட்டு, வெறும் கட்சி அரசியலில் நாட்டம் செலுத்துவது என்பது தெரிந்து கொண்டே படுகுழியில் விழுகின்ற செய்பாடாகவே முடியும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More