அம்பாறை அட்டப்பள்ளம் இந்து மயான ஆக்கிரமிப்பை முறியடிக்க குரல் கொடுத்ததால் பொலீசாரால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையிலடைக்கப்பட்டுள்ள 21 தமிழர்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு மாவட்ட அமைப்பாளர் சுரேஸ் மற்றும் ஜேந்திரன் ஆகியோர் இன்று) சனிக்கிழமை சென்று பார்வையிட்டுள்ளனர்.
இது தொடர்பில் குறிப்பிட்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன்,
‘அம்பாறை மாவட்டம் அட்டப்பள்ளம் கிராமத்து இந்து மயானத்தை மாற்று இனத்தவர்கள் ஆக்கிமிக்கமுற்பட்டபோது தமிழ்மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்கள். இதனையடுத்து அரசாங்க அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியிருந்தபோதிலும் குறித்த அதிகாரிகளும் அதே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தததால் தமிழ்த்தரப்புக்கு எதிராகச் செயற்பட்டதோடு தமது இனம்சார்ந்த அடிப்படையில் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க முற்பட்டதால் அங்கு முரண்பாடு உருவானது.
அதனைவிட அங்கு புதைக்கப்பட்டிருந்தவர்களின் புதைகுழிகளுக்கு மேலாக வாகனங்களையும் செலுத்தியிருந்தனர். இதனால் முறுகல்நிலை மேலும் தீவிரமடைந்தது. இதனையடுத்து அங்குள்ள அதிகாரிகளால் பொலிசார் வரவளைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று (02) பெயர்ப்பட்டியல் ஒன்றுடன் வந்த பொலிசார் 21 பேரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபின் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியபின் மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைத்துள்ளனர். இதில் பொலிசாரும் அரசாங்க அதிகாரிகளும் நடந்துகொண்ட விதமானது இனங்களுக்கிடையில் முறுகல் போக்கினையும் குரோத மனப்பாங்கினையும் உருவாக்குகின்ற வகையிலான பொறுப்பற்ற செயலாகும்.
இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இவ் மயான பிரச்சனை கடந்த ஒரு மாதகாலமாக இடம்பெற்றுவந்துள்ளது. இது தொடர்பில் தமிழ்மக்கள் தரப்பினால் அரசாங்க அதிகாரிகளுக்கும் பொலிசாருக்கும் முன்னரே தெரியப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் இவற்றினை உரியமுறையில் கையாளாமல் தமிழ் மக்களை திட்டமிட்டு கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். அவர்ளுக்கு பிணை வழங்குவதிலும் பொலிஸ்தரப்பு இழுத்தடித்துவருகின்றது. இவ்வாறான செயற்பாடுகள் இன நல்லிணக்கம் ஏற்படுவதை மோசமாகப் பாதிக்கும்’ – என்றார்.