Home இலங்கை விக்னேஸ்வரனின் கணக்கு? நிலாந்தன்…

விக்னேஸ்வரனின் கணக்கு? நிலாந்தன்…

by admin

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில் கடந்த வியாழக்கிழமை தமிழ்மக்கள் பேரவை கூடியிருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான வீதியோர போராட்டங்கள் ஓராண்டை பூர்த்தி செய்திருக்கும் ஒரு காலச் சூழலில் பேரவை கூடியிருக்கிறது.உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு முன் பேரவையில் பங்காளிகளாக காணப்பட்ட இரண்டு கட்சிகளையும் ஒருங்கிணைத்து அவற்றிற்கு தலைமை தாங்க கூடிய தகுதியும் பொறுப்பும் பேரவைக்கே இருந்தது. ஆனால் பேரவை அதை செய்யவில்லை.அதனால் அவ்விரு கட்சிகளும் தனித்தனியாக இருவேறு கூட்டுக்களைஅமைத்தன. இதனால் தமிழ் வாக்குகள் சிதறின.தனது பங்காளி கட்சிகளுக்கு உரிய நேரத்தில் உரிய வழிகாட்டலை செய்யத் தவறிய காரணத்தால் பேரவையானது ஒரு மக்கள் இயக்கமாக வெற்றி பெறத் தவறியது. இப்பொழுது அதனை ஒரு மக்கள் இயக்கமாக அதன் அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுக்கப்போவதாக விக்னேஸ்வரன் கூறுகிறார்.

பேரவை ஒரு கட்சியாக மாறாது என்பதனை ஒரு கற்பை போல திரும்ப திரும்ப வலியுறுத்துகிறார். அதேசமயம் கட்சி அரசியலில் ஈடுபடுபவர்களை புதிதாக பேரவைக்குள் இணைத்துமிருக்கிறார்.ஒரு நீதிபதி தீர்ப்பை எழுதிக்கொண்டு வந்து வாசிப்பது போல ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளை அவர் பேரவைக்குள் கொண்டு வந்து வாசித்ததாக பேரவை உறுப்பினர் சிலர் கருத்துத் தெரிவித்தார்கள். கூட்டமைபிற்குள் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்று விமர்சித்த நாம் பேரவையில் உறப்பினர்கள் எல்லாரோடும் கலந்தாலோசிக்காது ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளை முதல்வர் வாசித்ததை எப்படி எடுத்துக் கொள்வது? என்றும் அவர்கள் கவலைப்பட்டார்கள். புதிய அங்கத்தவர்களை இணைக்கும்போது கிழக்கிற்கும் வன்னிக்கும் பெண்களுக்கும் போதியளவு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்றும் ஒரு குற்றச் சாட்டு உண்டு.

முதலில் கட்சி அரசியல் தொடர்பில் விக்னேஸ்வரன் கூறி வருபவற்றை சற்று விளக்கமாகப் பார்க்கலாம். கட்சி அரசியல் எனப்படுவது ஏதோ புனிதமற்றது என்ற ஒரு தொனியை விக்னேஸ்வரனின் விளக்கங்களில் காண கிடைக்கிறது.அது சரியா?கட்சி என்றால் என்ன?ஒரு கொள்கையை செயலுருப்படுத்தும் நிறுவனக் கட்டமைப்பே கட்சியாகும்.எனவே ஓர் அரசியல் கொள்கையை செயலாக்குவதற்கு கட்சி அவசியம். தேர்தல்களின் மூலம் மக்கள் அதிகாரத்தைப் பெறுவதற்கும் கட்சி அவசியம். மார்க்ஸிஸ்;டுக்களின் வார்த்தைகளில் சொன்னால் புரட்சிகரமான சித்தாந்தம் இல்லையேல் புரட்சிகரமான கட்சி இல்லை.புரட்சிகரமான கட்சி இல்லையேல் புரட்சியும் இல்லை.எனவே விக்னேஸ்வரன் அவாவி நிற்கும் ஓர் அரசியலை மக்கள் மயப்படுத்தவும் அதன் வெற்றி இலக்கை நோக்கி எடுத்துச் செல்லவும் கட்சி அவசியம்.19ஆம் நூற்றாண்டின் மாக்ஸியத்தை 20 ஆம் நூற்றாண்டுக்குரிய ஒரு கட்சி கட்டமைப்புக்குள் கொண்டு வந்தவர் லெனின் என்று அவரைப் போற்றுவோர் உண்டு.இப்படிப் பார்த்தால் ஒரு கட்சியின்றி தமது இலட்சியத்தை விக்னேஸ்வரன் எப்படி அடையப்போகிறார்?

அதற்கு அவரே பதில் கூறுகிறார்.பேரவையை ஒரு முழுமையான மக்கள் இயக்கமாக மாற்றப் போகிகிறாராம்.ஒரு முழுமையான மக்கள் இயக்கம் என்றால் என்ன? சகல தளங்களிலும் மக்களை அரசியலில் நேரடி பங்காளிகளாக்கும் ஓர் இயக்கமே மக்கள் இயக்கமாகும்.ஆனால் பேரவையானது அப்படிப்பட்ட ஓர் இயக்கமா?அதில் எத்தனை செயற்பாட்டாளர்கள் உண்டு?எத்தனை பிரமுகர்கள் உண்டு? புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்களில் எத்தனை செயற்பாட்டாளர்கள் உண்டு? வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வீதியில் இறங்கத்தக்க செயற்பாட்டாளர்களை கொண்ட ஓர் அமைப்பாக பேரவையானது தன்னை இதுவரையிலும் நிரூபித்திருக்கவில்லை.மாறாக அது தன்னை ஒரு பிரமுகர் மைய அமைப்பாகவே காட்டியிருக்கிறது.குறைந்தபட்சம் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக போராடிக் கொண்டிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு கூட பேரவையால் தலைமை தாங்க முடியவில்லை.

பேரவையின் துடிப்பான செயற்தளம் எனப்படுவதே அதன் பங்காளிக்கட்சிகளான மக்கள் முன்னணியும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.வும் தான்.அக்கட்சிகளுக்கு தலைமை தாங்கும் பொறுப்பை பேரவை கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது தட்டிக்கழித்துவிட்டது.அதுமட்டுமல்ல தேர்தலின்போது தமிழ் மக்களுக்கும் உரிய வழிகாட்டுதலைப் பேரவை செய்திருக்கவில்லை.பதிலாக விக்னேஸ்வரன் வழமை போல கருணாநிதியின் பாணியில் கலைத்துவம் மிக்க சொற்களால் வாக்காளர்களுக்கு அருப வழிகாட்டுதலை செய்தார்.போரின் கடைசி கட்டத்தில் கருணாநிதியும் அரசியல் மொழிக்கு பதிலாக கலை மொழியில் கடிதங்களை எழுதினார்.ஆனால் இனப்படுகொலைக்கு பின் எஞ்சியிருக்கும் மக்களுக்கு தேவைப்படுவது துலக்கமான அரசியல் மொழியில் வழங்கப்படும் வழிகாட்டுதலே. இவ்வாறு தமிழ் வாக்காளர்களுக்கு உரிய வழிகாட்டுதலை செய்யத் தவறிய பேரவையானது தேர்தல் முடிவுகளுக்கு முழுமையாக உரிமை கோர முடியாது.மாறாக வாக்குகள் பல முனைகளில் சிதறியதற்கு பேரவையும் பொறுப்பேற்க வேண்டும்.இத்தகைய பொருள்படக் கூறின் பேரவையானது உள்ளுராட்சி மன்ற தேர்தலோடு காலாவதியாக தொடங்கியது எனலாம்.ஆனால் விக்னேஸ்வரன் அதை தூக்கி நிறுத்த எத்தனிக்கிறார். எதற்காக?

பேரவைக்குள் காணப்படும் சிலர் அவர் தமிழரசுக்கட்சியை மறைமுகமாக பலப்படுத்துகிறாரா என்று கேள்வியெழுப்புகின்றனர்.அதன் அதிருப்தியாளiர்களை வேறு தரப்புகளுடன் இணையவிடாது பேரவக்குள் உள்ளீர்த்து தன்னோடு வைத்திருப்பதற்கு முயற்சிக்கிறாரா? என்றும் அவர்கள் சந்தேகிக்கிறார்கள்.அவர் என்றைக்குமே கூட்டமைப்பை விட்டு வெளியேற மாட்டார். எனவே கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களை தன்னோடு வைத்திருப்பதன் மூலம் அவர் கூட்டமைப்பை மறைமுகமாக பாதுகாக்கிறாரா? என்றும் அவர்கள் கேட்கின்றார்கள. இது ஒரு விளக்கம்.

இரண்டாவது விளக்கம் உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது பேரவை திடமான முடிவுகளை எடுக்கத் தவறியதால் அதன் பங்காளிக்கட்சிகளில் ஒரு கட்சியான மக்கள் முன்னணி பேரவை என்ற பெயரை தனது தேர்தல் கூட்டுக்குப் பயன்படுத்தியது. மேலும் பேரவை உறுப்பினர்களில் சிலர் மக்கள் முன்னணியைப் பகிரங்கமாக ஆதரித்தார்கள்.இதை சுரேஸ் பிரேமச்சந்திரன் அணி வெளிப்படையாகவே விமர்சித்தது.பேரவை ஒரு பக்கம் சாய்கிறது என அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.மக்கள்; முன்னணி பேரவையின் பெயரை பாவித்ததில் விக்னேஸ்வரனுக்கு உடன்பாடில்லை என்று கூறப்படுகிறது.அதேசமயம் வவுனியாவில் வைத்து சிவசக்தி ஆனந்தன் அடுத்த மாகாண சபைத் தேர்தலில் விக்னேஸ்வரன் தங்களோடு நிற்பார் என்று கூறியதாக வெளிவந்த செய்திக்கு விக்னேஸ்வரன் உடனடியாக மறுப்பும் தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதோர் பின்னணியில் பேரவையையும்,தன்னையும் கட்சிகள் உரிமை கோருவதை தவிர்ப்பதற்காக தமிழரசுக்கட்சி அதிருப்பதியாளர்களை பேரவைக்குள் உள்வாங்கி அதன் பொதுத் தன்மையை மேலும் பரவலாக்க அவர் முயற்சிக்கிறார் என்ற ஒரு விளக்கமும் உண்டு.இது இரண்டாவது

மூன்றாவது விளக்கம்; அவர் சம்பந்தருக்கு எதிராக செங்குத்தாக திரும்ப தயங்குகிறார். எனவே வரும் மாகாண சபைத் தேர்தல் வரையிலும் தனக்குரிய ஒரு தளத்தை அவர் மறைமுகமாகப் பலப்படுத்த விளைகிறார்.இதன்மூலம் அவர் மூன்று தெரிவுகளை மனதில் வைத்து தனது பேரத்தை கட்டியெழுப்பப் பார்க்கிறார். முதலாவது தெரிவு சம்பந்தருக்குப் பின் கூட்டமைப்பின் தலைவராவது,இரண்டாவது தெரிவு மீளவும் கூட்டமைப்பின் முதலமைச்சராவது. மூன்றாவது தெரிவு எதிரணிக்கு தலைமை தாங்கி மீண்டும் முதல்வராவது.

இதில் முதலாவது தெரிவின்படி அவர் பல தடைகளை தாண்டவேண்டியிருக்கும்.சுமந்திரனை மட்டுமல்ல கூட்டமைப்பின் தலைமைப் பதவியைக் குறி வைத்து தங்களைத் தேசிய தலைவர்களாகக் கற்பனை செய்து கொண்டு வரிசையில் நிற்கும் பலரோடு மோதவேண்டியிருக்கும். கட்சிக்குள் சுமந்திரனுக்குக் கிடைத்திருக்கும் முதன்மை எனப்படுவது ஓர் உள்நாட்டு ஏற்பாடு மட்டுமல்ல. அதற்கு ஓர் அனைத்துலகப் பரிமாணமும் உண்டு. கூட்டரசாங்கத்தைப் பாதுகாக்க விளையும் மேற்கு நாடுகளுக்கும்,இந்தியாவிற்கும் தமிழ் தரப்பு பங்காளிகள் தேவை.அப்படிப்பட்ட ஒருவர்; கூட்டமைப்பின் தலைவராக வருவதையே அவர்கள் விரும்புவார்கள்.எனவே இம் முதலாவது தெரிவை நோக்கி உழைப்பது என்று சொன்னால் விக்னேஸ்வரன் இப்போது இருப்பதை போல ஒரு மென்தண்டாக இருக்க முடியாது. றிஸ்க் எடுக்கத் தயாரான ஒரு வன்தண்டாக மாற வேண்டியிருக்கும்.

கொழும்பு மேட்டுக்குடியைச் சேர்ந்த அவர் அரசியலுக்கு வந்த பொழுது தயான் ஜெயதிலக அவரை தமிழ் மென் சக்தி என்று வர்ணித்தார். ஆனால் தமிழ் மென்சக்தியானது இப்படியொரு திருப்பத்தை எடுக்கும் என்று கொழும்பு உயர் குழாத்து புத்திஜீவிகள் கணிக்கத் தவறிவிட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல தமிழ்ப் புத்திஜீவிகள் கருத்துருவாக்கிகளாலும் கூட விக்னேஸ்வரன் இப்படியொரு வளர்;ச்சியைப் பெறுவார் என்பதை முன்கூட்டியே அனுமானிக்க முடியவில்லை. அதிகம் போவான் ஏன்? அவரை அரசியலுக்குள் அழைத்து வந்த சம்பந்தராலும் அதைக் கணிக்க முடியவில்லை. எனவே எதிர்காலத்தில் குறிப்பாக மாகாண சபையின் பதவிக்காலம் முடியும்பொழுது அவர் எப்படியொரு முடிவையெடுப்பார? இரண்டாவது தெரிவின்படி அவரை மீண்டும் முதல்வராக்குவது என்று சம்பந்தர் சிந்தித்தால் எதிரணியை மேலும் பலவீனப்படுத்தலாம். கூட்டமைப்பின் சிதைவை மேலும் ஒத்தி வைக்கலாம்.

மூன்றாவது தெரிவின்படி அவர் தனது எதிர்கால திட்டத்திற்கேற்ப ஒரு தளத்தை தயாரிக்கிறார் என்பது.காலைக்கதிர் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் அதைத் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறது. தனக்கு அதிகம் இணக்கமான ஆட்களை பேரவைக்குள் எடுத்து அவர் தன்னை பலப்படுத்துகிறார் என்றும் அதன்மூலம் வரும் மாகாண சபைத்தேர்தலின் போது கூட்டமைப்பு அவருக்கு இடம் கொடுக்க தவறினால் அதிலிருந்து வெளியேறி ஒரு புதிய கட்சியை உருவாக்குவதற்கு தேவையான ஒரு அத்திவாரத்தை அவர் கட்டியெழுப்புகிறார் என்றும் கருதப்படுகிறது. குறிப்பாக பேரவைக் கூட்டத்தின் பின் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்களில் புவிசார் அரசியலை கையாள்வது தொடர்பில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் தெரிவித்த கருத்துக்கள் இந்தியாவிற்கு உற்சாகமூட்டக் கூடியவை. ஒரு தலைவராக அவர் தனது வெளியுறவுக் கொள்கை நிலைப்பாடு ஒன்றை மங்கலாகவேனும் வெளிப்படுத்த விளைகிறாரா?

ஆனால் இன்று வரையிலும் அவர் சம்பந்தருக்கு எதிராக செங்குத்தாகத் திரும்பத் தயாரில்லை.அதனால்தான் ஒரு மறைமுக தளத்தை கட்டியெழுப்பிவருகிறார் என்று கருதலாமா? .அவர் அப்படி தயாரில்லாதபோது அருந்தவபாலன் தயாராக இருப்பார் என்று எப்படி எடுத்துக் கொள்வது? பேரவை கூட்டத்தில் விக்னேஸ்வரன் அருந்தவபாலனின் பெயரை அறிவித்திருந்தார்.ஆனால் அருந்தவபாலன் அக்கூட்டத்திற்கு வருகை தரவில்லை.அனந்தியும் வரவில்லை.ஆனால் அதேசமயம் அன்றைய தினம் தனக்கு வந்த தொலைபேசி அழைப்புக்கள் எதற்கும் அருந்தவபாலன் பதிலளிக்கவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.இது மூன்றாவது விளக்கம்.

இந்த மூன்றாவது விளக்கத்தின்படி வரும் மாகாணசபை தேர்தலின்போது பேரவை ஒரு அரசியல் இயக்கமாகவே இருக்க அதிலிருக்கும் அரசியல்வாதிகள் விக்னேஸ்வரனுடன் இணைந்து ஒரு கட்சியை உருவாக்கக்கூடும்.பேரவை அக்கட்சியை பின்னிருந்து ஆதரிக்கும்.அப்பொழுது சில சமயம் பேரவைக்குள் ஏற்கனவே உள்ள கட்சிகளையும் அவர் தன்னோடு இணைக்க கூடும்.ஆனால் கடந்த வியாழக்கிழமை நடந்த கூட்டத்தில் கூரேஸ் வந்திருந்தார்.கஜேந்திரகுமார் வந்திருக்கவில்லை

கஜேந்திரகுமார் தேர்தலில் பேரவையயின் பெயரை பாவித்;திருந்;தாலும் கூட அவரது கட்சி தேர்தற் பிரசாரங்களில் விக்னேஸ்வரனின் பெயரையோ படத்தையோ பாவித்திருக்கவில்லை.அவரது கட்சியானது தேர்தலுக்கு முன்னரே தன்னை ஒரு மாற்று அணியாக கருதி உழைக்க தொடங்கிவிட்டது.தேர்தல் வெற்றிகளின் பின் அக்கட்சி தன்னை மேலும் உறுதியாக ஒரு மாற்றுத் தரப்பாக நம்புகிறது.தேர்தலுக்கு பின் அக்கட்சியினர் விக்னேஸ்வரனை சந்தித்தார்கள்.அச்சந்திப்பின் பின்னரும் அவர்கள் தாங்களே மாற்று என்று நம்புவதாக தெரிகிறது.விக்னேஸ்வரன் மாற்று அணிக்கு தலைமை தாங்குவார் என்று அவர்கள் பெரியளவில் காத்திருப்பதாகவும் தெரியவில்லை.

இத்தகையதோர் பின்னணியில் எதிர்காலத்தில் விக்னேஸ்வரன் ஒரு கட்சியை ஒருங்கிணைத்தாலும் அதில் நிபந்தனையின்றி இணைவதற்கு கஜேந்திரகுமாரும் சுரேசும் முன்னரைப்போல தயாராக இருப்பார்களா என்ற கேள்வி இங்கு முக்கியம் மேற்கண்ட மூன்று விளக்கங்களையும் விக்னேஸ்வரன் நிராகரிக்க கூடும்.ஆயின் அவர் தலைமை தாங்கும் பேரவையின் இறுதி இலக்கு என்ன? அந்த இலக்கை வென்றெடுப்பதற்கான செயல் வழி எது?அல்லது வழி வரைபடம் எது?

ஒரு கட்சிக்கூடாக சிந்திக்காமல் ஓர் அரசியல் இலக்கை வென்றெடுப்பதென்றால் அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு.தேர்தல் வழிமுறையில் ஈடுபடாத வெகுசன மைய அமைப்பொன்றை கட்டியெழுப்புவதே அந்த வழி. அந்த அமைப்பின் மூலம் வெகுசன எழுச்சிகளை நடாத்தி மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். இவற்றையெல்லாம் செய்வதற்கு விக்னேஸ்வரன் தயாரா? அதற்குத் தேவையான வாழ்க்கை ஒழுக்கமும், அரசியல் திடசித்தமும் அவரிடம் உண்டா? அதிகபட்சம் பிரமுகர் மைய இயக்கமாக காணப்படும் பேரைவயானது இனிமேற்தான் தன்னை ஒரு மக்கள் இயக்கமாக நிரூபிக்க வேண்டியிருக்கிறது.அவ்வாறு நிரூபிக்க தவறின் கூட்டமைப்பையும் பலவீனப்படுத்தி எதிரணியையும் பலவீனப்படுத்தியது மட்டுமல்ல ஒரு மக்கள் இயக்கம் தோன்றியிருக்க வேண்டிய ஒரு கால கட்டத்தில் ஒரு பிரமுகர் இயக்கத்தை தொடங்கி தமிழ் மக்களின் அரசியல் பயணத்தை தாமதப்படுத்தியதற்கான பொறுப்பையும் பேரவை ஏற்க வேண்டியிருக்கும.;

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More