அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு நடத்திய துப்பாகிதாரி ஒருவர் பின் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உள்ளூர் நேரப்படி நேற்று சனிக்கிழமை மதியம் துப்பாக்கியுடன் வெள்ளை மாளிகை வேலி அருகே சென்ற குறித்த நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு. பின் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார். எனினும் இந்த துப்பாக்கி சூட்டில் யாரும் காயமடையவில்லை எனத் தெரிவித்துள்ள காவல்துறையினர் துப்பாக்கிதாரி குறித்த தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.
துப்பாக்கிதாரி தாக்குதலை மேற்கொண்ட போது அவர் பெரும் திரளான மக்கள் மத்தியில் இருந்ததாக இந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள வொஷிங்டன் போஸ்ட் ஊடகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் நடந்த சமயத்தில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இருக்கவில்லை எனவும் அவர் புளோரிடாவில் இருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக வெள்ளை மாளிகை அருகே இது போன்ற பல பாதுகாப்பு மீறல் சம்பவங்கள் நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது