அமெரிக்காவின் கிழக்கு கடலோர மாகாணங்களை கடுமையாக தாக்கிய பனிப்புயலில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு இடம்பெற்று வருகின்ற நிலையில் கிழக்கு கடலோர மாகாணங்களான நியூஜெர்சி, நியூயோர்க், மசாசூசெட்ஸ், வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, நியூஹாம்ஷையர், மேரிலாண்ட், ரோடே தீவுகள் ஆகியவற்றின் பல்வேறு நகரங்களை பனிப்புயல் நேற்று பலமாக தாக்கியது.
அப்போது மணிக்கு 65 கிலோ மீட்டர் முதல் 100 கி.மீ வேகத்தில் காற்றும் வீசியயதுடன் பலமாக பனிமழையும் பெய்தமையினால் சுமார் 1 அடி உயரத்துக்கும் மேலாக பனி தேங்கி காணப்பட்டுள்ளது
மேலும் கடற்கரையோர நகரங்களில் சூறாவளி காற்றுடன் கடுமையான மழையும் பெய்தமையினால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இந்தநிலையில் இந்த பனிப்புயல், மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை அமெரிக்காவில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நியூயோர்க் நகரில் உள்ள விமான நிலையங்களில் நேற்று முற்றிலும் விமான சேவை ரத்து செய்யப்பட்டதனால் 3 ஆயிரத்துக்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களின் சேவை முடங்கியது. மேலும் பகுதிகளில் உள்ள 14 மாகாணங்களிலும் சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.