அம்பாறை மற்றும் திகன ஆகிய பிரதேசங்களில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் பற்றிய அறிக்கை
அண்மையில் அம்பாறை மற்றும் திகன ஆகிய பிரதேசங்களில் இனங்களுக்கிடையிலான சமூக ஒற்றுமையினை சீர்குலைக்கும் வகையிலும் சில வணக்கஸ்தலங்கள், வீடுகள் மற்றும் வியாபார நிலையங்கள் ஆகியவற்றுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையிலும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை இலங்கை அரசு மிக உறுதியாகவும் வன்மையாகவும் கண்டிக்கின்றது. அத்தோடு இன ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், குறிப்பாக முஸ்லிம் மற்றும் ஏனைய இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் சமூக ஊடகங்களின் ஊடாகவும் வலைத்தளங்களின் ஊடாகவும் தவறாக வழிநடத்தப்பக்கூடிய மற்றும் குரோதத்தை வளர்க்கக்கூடிய தகவல் பரிமாற்றங்களை பகிர்வதற்கு சிலர் எடுக்கும் முயற்சியினை அரசு மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
அத்தகைய குரோதத்தன்மைமிக்க தவறான தகவல்களைக் கண்டு ஏமாற வேண்டாமென இலங்கையின் அனைத்து பிரஜைகளிடமும் அரசு கேட்டுக் கொள்கின்றது. அதேவேளை சுமார் மூன்று தசாப்தங்களாக வன்முறைகளினால் பீடிக்கப்பட்ட ஒரு நாடும் மக்களும் என்ற வகையில் அவ்வாறான ஒரு நிலைமை மீண்டும் ஏற்படுவதிலிருந்து நாம் விலகிக் கொள்ளவேண்டும்.
இன்றைய தினம் இடம்பெற்ற தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின்போது மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள், பாதுகாப்புத் துறை பிரதானிகளுக்கும் பொலிசாருக்கும் சட்டத்தினையும் ஒழுங்கையும் செயற்படுத்துமாறும், அரச அதிபர்கள் பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஒன்றிணைந்து மக்களுக்கு தீங்கை ஏற்படுத்தக்கூடிய வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராக தாமதமின்றி செயற்படுமாறும் உத்தரவிட்டார். இன மற்றும் மதங்களுக்கிடையிலான வேற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு தாக்குதலுக்கு எதிராகவும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சட்டத்தினை பக்கச்சார்பின்றி முழுமையாக அமுல்படுத்துவதற்கு அத்தரப்பினர் ஏற்கனவே செயற்பட்டு வருகின்றனர்.
குற்றச்செயல்களில் ஈடுபடும் அதேவேளை சட்டத்தையும் ஒழுங்கையும் சீர்குலைக்கும் தரப்பினருக்கு எதிராக உறுதியானதும் நிலையானதுமான நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசு ஒருபோதும் பின்வாங்காது. மக்களின் சம உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையிலும் அனைவருக்கும் அனைத்து விதமான சுதந்திர நிலைகளையும் அனுபவிக்கக்கூடிய வகையிலும் பன்முகத்தன்மையை மதித்து நிலையான சமாதானம் மிக்க முற்போக்குத் தன்மையுடனான ஒரு தேசத்தை கட்டியெழுப்புவதற்காக அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பையும் பங்குபற்றலையும் இன மத பேதமின்றி பெற்றுத்தருமாறு அரசு வேண்டி நிற்கின்றது. மதத் தலைவர்களும் அரசியல்வாதிகளும் சமூகத் தலைவர்களும் சிவில் சமூகம் மற்றும் ஊடகங்கள் ஆகியனவும் உள்வாங்கப்பட்ட இலங்கையின் அனைத்துக் குடிமக்களும் எல்லாவிதமான வன்முறைகளையும் வலுவாகக் கண்டிப்பதுடன் சமாதானம், ஒற்றுமை ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.
2018.03.05 பணிப்பாளர் நாயகம், அரசாங்க தகவல் திணைக்களம்