குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வடகொரியா சென்றுள்ள தென்கொரிய பிரதிநிதிகள் குழுவை சந்தித்த வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங் உன் அவர்களுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறியும் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தியதனால் அந்நாட்டின் மீது ஐ.நா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதார தடை விதித்திருந்தன.
இந்தநிலையில் வடகொரியா தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தென்கொரியாவிலிருந்து பத்து பேரைக் கொண்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவொன்று வடகொரியாவிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.
இதன் போது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கிம் விருப்பம் தெரிவித்ததாகவும் எனினும் அணு ஆயுதங்களை முற்றிலுமாக கைவிடுவதற்கு அமெரிக்கா கோரிக்கை விடக்கூடாது என அவர் நிபந்தனைகள் விதித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் முன்னேற்ற நடவடிக்கையாக அடுத்த மாதம் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அணுவாயுத சோதனைகள் இனி அதிகம் இருக்காது என கிம் தெரிவித்துள்ளதாகவும் தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
வடகொரிய தலைவருடன் தென் கொரிய உயர்மட்ட அதிகாரிகள் சந்திப்பு
Mar 6, 2018 @ 03:36
வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங் உன் உடன், தென் கொரிய உயர்மட்ட அதிகாரிகள் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். தென் கொரியாவின் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு, வடகொரிய தலைவர் இராப்போசன விருந்துபசாரம் ஒன்றையும் வழங்கியுள்ளார்.
தென்கொரிய உயர்மட்டப் பிரதிநிதிகளின் வடகொரிய பயணத்தினை அந்நாட்டு ஜனாதிபதி செயலகம் உறுதி செய்துள்ளது.
தென்கொரியாவிலிருந்து பத்து பேரைக் கொண்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவொன்று இவ்வாறு வடகொரியாவிற்கு பயணம் செய்துள்ளது. வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை மீளவும் ஆரம்பிக்கும் நோக்கில் தென்கொரிய பிரதிநிதிகள் இந்த பயணததினை மேற்கொண்டுள்ளனர்.
வட மற்றும் தென் கொரியாவிற்கு இடையிலான உறவுகள் அண்மைய குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடர்ந்து சமூகமடையத் தொடங்கியுள்ளது. அணுவாயுத உற்பத்திகளை தடுப்பது குறித்தும் தென்கொரியா யோசனைகளை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.