திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று 48 மணி நேரத்துக்குள் அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் நிறுவப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் புரட்சியாளர் லெனின் சிலை அகற்றப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளன.
திரிபுராவில் பெலோனியா கல்லூரி சதுக்கத்தில் காணப்பட்ட லெனின் சிலை ஜேசிபி இயந்திரத்தை கொண்டு வலது சாரி ஆதரவாளர்கள் அகற்றும் வீடியோ ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தினால் வெளியிட்டுள்ளது.
லெனின் சிலை அகற்றப்படும்போது அங்கு கூடியிருந்தவர்கள் பாரத் மாதா கி ஜெய் என கோசமிடுவது அந்த வீடியோ காட்சியில் காணப்படுகின்றது இந்தநிலையில் லெனின் சிலை அகற்றம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலங்கள் தாக்கப்பட்டுள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அக்கட்சியினர் பாஜகவினரே இதற்கு காரணம் என குற்றம் சுமத்தியுள்ளனர். எனினும் இந்தக் குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது.
மேலும் திரிபுராவில் வலது சாரி ஆதாரவாளர்களின் இந்த வன்முறை காரணமாக பதற்றம் நிலவி வருகின்றதாகவும் இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.