குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அணுவாயுத பரிசோதனைகளை இடைநிறுத்திக்கொள்ளவும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் வடகொரியா விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் இது குறித்த வடகொரியாவின் நிலைப்பாடு ஆராயப்பட வேண்டியது என அமெரிக்க தேசிய புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் டேன் கோட்ஸ் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை நடத்துவதற்கு விரும்புவதாக வடகொரியா விடுத்துள்ள அறிக்கை குறித்து முழுமையாக ஆராயப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அணுவாயுதங்களை களைவது தொடர்பில் வடகொரியா பேச்சுவார்த்தை நடத்த ஆயத்தமாக உள்ளது எனவும், வடகொரியாவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதும் மட்டுமே நிபந்தனையாக அமைந்துள்ளது எனவும் வடகொரியா தெரிவித்திருந்தது.
வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னை, தென்கொரிய விசேட பிரதிநிதிகள் சந்திப்பின் போது அணுவாயுதங்களை களைவது குறித்தும் கலந்துரையாடப்பட்ட போது வடகொரியா அணுவாயுத பரிசோதனைகளை இடைநிறுத்திக்கொள்ளவும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் விருப்பம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது