மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பு தொடர்கிறது என ஐ.நா. மனித உரிமை பேரவை தெரிவித்துள்ளது. மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்றமையினால் சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேசுக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். அங்குள்ள அகதிகள் முகாம்களில் அதிகமானோர் தங்க வைக்க்பபட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் அதிகளவிலான அகதிகள் சென்று கொண்டே உள்ளனர்.
இந்தநிலையில் புதிதாக சென்றுள்ள அகதிகள் குழுவை ஐ.நா. சபையின் மனித உரிமைகளுக்கான அமைப்பின் துணை பொதுச் செயலாளர் அண்ட்ரூ கிளிமோர் சந்தித்து அவர்களிடம் உரையாடியுள்ளார்.
அந்தவகையில் மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் தீவிரவாதம் என்ற பிரசாரம் மூலமும் தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்காமலும் செய்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வலுக்கட்டாயமாக வெளியேற வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மியான்மர் அரசு அகதிகளைத் திரும்ப அழைத்துக் கொள்வதாகக் தெரிவித்தாலும் ராணுவம் அவர்களை வெளியேற்றி வருகின்றது எனவும் இப்போதுள்ள சூழலில் அகதிகள் தங்கள் நாட்டுக்குத் திரும்ப வாய்ப்பு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.