இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரத்தின் விசாரணைக் காவலுக்கு நீதிமன்றம் வழங்கிய அனுமதி நாளை மறுதினத்துடன் முடிவடையும் நிலையில் அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த இந்திய குற்றப் புலனாய்வுத்துறை தீர்மானித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் தொடர்பில் இந்திய குற்றப் புலனாய்வுத்துறையால் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் நேற்று பாட்டியாலா நீதிமன்றில் மீண்டும் முன்னிலைபடுத்தப்பட்டார். இதன்போது, கார்த்தி சிதம்பரம் சார்பில்முன்னிலையான அபிஷேக் சிங்வி அவருக்கு பிணை கோரி மனு தாக்கல் செய்தார். 5 நாள் விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இந்த வழக்கில் மிகப்பெரிய சதி ஒழிந்துள்ளதாகவும் கூறிய சி.பி.ஐ வழக்கறிஞர் தஷ்கர் மேஹ்தா அதிகாரிகளின் கேள்விக்கு கார்த்தி சரியான பதிலை அளிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்த வழக்கில் இரண்டு நாட்களுக்கு முன்னர் மிக முக்கியமான ஆதாரங்கள் சிக்கியுள்ளன எனவே, கார்த்தி சிதம்பரத்தை விசாரிக்க மேலும் 9 நாட்கள் நீதிமன்றம் கால அவகாசம் வழங்க வேண்டும் என தஷ்கர் மேஹ்தா நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்தார்.
அரசுத்தரப்பு குற்றச்சாட்டுகளை மறுத்த அபிஷேக் சிங்வி, கார்த்தி சிதம்பரத்தை எப்படியாவது விசாரணைக் காவலில் அடைத்திட சி.பி.ஐ முயற்சிக்கிறது என்றும் அவர் விசாரணைக்கு தயாராகவே உள்ளார் என்றும் ஆனால், சி.பி.ஐ விரும்பும் வாக்குமூலத்தை கார்த்தி அளிக்கமாட்டார் என்றும் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கார்த்தி சிதம்பரத்தை மேலும் 3 நாட்கள் காவலில் விசாரிக்க சி.பி.ஐ.க்கு அனுமதியளித்தார். கார்த்தி சிதம்பரத்தின்பிணை மனு மீதான விசாரனை எதிர்வரும் 9ஆம் திகதி விசாரிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
விசாரணைக் காவல் நாளை மறுதினம் முடிவடையவுள்ள நிலையில் உண்மை கண்டறியும் சோதனை நடாத்தப்படவுள்ளது. உண்மை கண்டறியும் சோதனை என்பது குற்றம் சாட்டப்பட்ட நபரை மயக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தப்படும். இந்த சோதனைக்கு நீதிமன்றத்தின் அனுமதி அவசியமானதாகும் என்பது குறிப்பிடத்தக்கது