குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சட்டம் ஒழுங்கு அமைச்சு வழங்கப்படாமை குறித்து முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவான தரப்பினர் தமக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படுவதனை எதிர்த்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹூனுபிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் உரிய இடத்தில் உரிய தலைமையில்லாத காரணத்தினால் கண்டியில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு அமைச்சராக தாம் நியமிக்கப்பட்டால் அது ராஜபக்சக்களுக்கு பெரும் தலையிடியை ஏற்படுத்தும் என்பதனை மஹிந்த ஆதரவாளிகள் புரிந்துகொண்டுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியன தமக்கு ஆதரவளித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். ரஞ்சித் மத்தும பண்டாரவிற்கு அமைச்சுப் பதவி வழங்கியதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.