இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்குமிடையிலான தொடர்புகளை உறுதிப்படுத்துவதற்காக வருடாந்தம் இடம்பெறும் இம்முறை விஜயமாக நான்காவது தடவையாக இலங்கைக்கு வருகை தந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் அலுவல்கள் தொடர்பான உதவி பொதுச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் (Jeffrey Feltman) இன்று (09) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்துள்ளார். .
இலங்கையின் ஜனநாயகம், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களை பாராட்டிய ஜெப்ரி பெல்ட்மன் இதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு குறித்து மகிழ்ச்சி வெளியிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு வழங்கிவரும் உதவிகள் வழிகாட்டல்கள் உள்ளிட்ட ஒத்துழைப்பு குறித்து நன்றி தெரிவித்த ஜனாதிபதி எதிர்காலத்திலும் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
உலகின் அனைத்து நாடுகளுடனும் இலங்கை பேணி வரும் நட்புறவு ரீதியான வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்திலும் அந்த கொள்கையை பின்பற்றி சர்வதேச அமைப்புகளுடனும் அனைத்து நாடுகளுடனும் தொடர்புகளை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தி முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான ஒத்துழைப்பு எதிர்காலத்தில் கிடைக்குமென்று ஜெப்ரி பெல்ட்மன் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ உள்ளிட்ட அதிகாரிகளும் இச்சந்திப்பின்போது பிரசன்னமாகியிருந்தனர்.