அமெரிக்காவில் உள்ள ஓய்வுபெற்ற படை வீரர்களுக்காக நடத்தப்படுகிற இல்லம் ஒன்றில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் நடத்திய தாக்குதலில் அங்கு பணிபுரிந்த 3 பெண் ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள யோன்ட்வில்லி நகரில் உள்ள ராணுவ வீரர்களுக்கான இல்லத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
36 வயதான அல்பர் வாங் என்ற முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அங்குள்ளவர்களை பணயக்கைதிகளாக கைது செய்துள்ளார். தகவலறிந்த பாதுகாப்புப் படையினர், இல்லத்தினை சுற்றி வளைத்த போதும் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால் அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை.
தொடர்ந்து இல்லத்தினுள் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதனையடுத்து, மருத்துவமனை கதவுகளை உடைத்து பாதுகாப்புப் படையினர் உள்ளே சென்றபோது அவர்களை நோக்கி குறித்த நபர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தி அவரை சுட்டுக் கொன்றனர்.
இந்தநிலையில் இல்லத்தினுள் இருந்த மூன்று பெண் ஊழியர்களே சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவில் ஓய்வுபெற்ற படை வீரர்களுக்காக நடத்தப்படுகிற மிகப்பெரிய இல்லம் இதுதான் என்பதுடன் இந்த இல்லத்தில், முன்னாள் படை வீரர்கள் சுமார் 1,000 பேர் தங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.