Home இலங்கை சிறிசேனவும் திகனவும் – கற்றுக்கொள்ளாத 3 பாடங்கள்: சுனந்த தேசப்பிரிய – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்…

சிறிசேனவும் திகனவும் – கற்றுக்கொள்ளாத 3 பாடங்கள்: சுனந்த தேசப்பிரிய – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்…

by admin

கட்டுரையின் உள்ளடக்கத்திற்கு கட்டுரையாளரே பொறுப்பு…

முதலில் நிறைவேற்று ஜனாதிபதி சிறிசேன எமக்கு கற்பித்துக் கொண்டிருக்கும் புதிய பாடமற்ற பாடத்தைப் பார்ப்போம். அதாவது 1978ம் ஆண்டு முதல் இந்த நாட்டின் ஜனநாயகவாதிகள் அறிந்திருந்த பாடமாகும். ஜே.ஆர்.ஜயவர்தனவினால் அறிமுகம் செய்யப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை எவ்வளவு எதேச்சாதிகாரமானது என்பதே அந்தப் பாடமாகும்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதியாகவே சிறிசேன ஜனாதிபதியாக தெரிவாகினார். எனினும், தற்பொழுது அவர் அந்தப் பதவியை முழுவதுமாக துஸ்பிரயோகம் செய்கின்றார்.

19ம் திருத்தச் சட்டத்தின் மூலமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்திருக்காவிட்டால் சிறிசேன எவ்வாறான ஓர் நாடகத்தை ஆடியிருப்பார் என்பதனை நினைத்துப்பார்க்க முடியாது. தனது சுய விருப்பின் அடிப்படையில் அதிகாரங்களை துறந்த தலைவராகவே அவர் தன்மை பிரச்சாரப்படுத்திக் கொள்கின்றார். ஜனாதிபதியாவது குறித்து கனவில் கூட நினைக்காத ஒருவரை ஜனாதிபதியாக்கியது பிரதானமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வதற்காகும் என்பதனை சிறிசேன நினைத்துப்பார்க்கின்றார் இல்லை.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதியினால் உருவாக்கிய தேவையற்ற ஸ்திரமற்ற நிலைமையும் அண்மையில் ஏற்பட்ட வன்முறைகள் தீயைப் போன்று பரவிச் செல்ல ஏதுவானது என்பதில் சந்தேகமில்லை. சட்டம் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகாவை பிரதமர் பரிந்துரை செய்த போது அதனை நிராகரிப்பதற்கான தார்மீக அல்லது சட்ட ரீதியான கடப்பாடு ஜனாதிபதிக்கு கிடையாது. எனினும் மஹிந்த ராஜபக்ஸக்களுடன் ஜோடி சேரும் நோக்கில் சரத் பொன்சேகாவை அந்தப் பதவியில் அமர்த்துவதனை ஜனாதிபதி நிராரித்தார்.

பாராளுமன்றில் பெரும்பான்மை பலமுடைய பிரதமருக்கு மேலதிகமாக வடக்கு கிழக்கில் அபிவிருத்திக்காக ஜனாதிபதி செயலணிகள் இரண்டினை ஜனாதிபதி நியமித்துள்ளார் என்பது ஜனாதிபதியின் இந்த செறய்பாட்டை நிருபிக்கும் மற்றுமொரு உதாரணமாகும். தமக்கு விருப்பானதை செய்ய நிறைவேற்று அதிகாரத்தினால் அதிகாரம் வழங்கியுள்ளதாக சிறிசேன கருதுகின்றார்.

விக்ரமசிங்கவின் அரசியலுடன் எமக்கு இணக்கம் உண்டா இல்லையா என்பது வேறு பிரச்சினை. எனினும் பெரும்பான்மை பலமுடைய பிரதமர் என்பதனை மறுக்க முடியாது. நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வதாக உறுதியளித்து ஆட்சி பீடம் ஏறிய சிறிசேன நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடமாவது நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு துளியைக் கூட விட்டு வைக்கக்கூடாது என்பதாகும்.

மஹிந்த ராஜபக்சவிற்கு ஜனாதிபதியாவதற்கான சட்ட ரீதியான அவகாசம் கிடையாது. சிறிசேனவிற்கு மீளவும் ஜனாதிபதியாகும் அரசியல் அவகாசமோ தார்மீக உரிமையோ கிடையாது.

விக்ரமசிங்க பற்றி பேசி பயனில்லை. இதனால் இந்த அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இதற்காக பேயுடன் இணைந்து செயற்பட முடிந்தாலும் இணைந்து கொள்ள வேண்டும், இந்த இரண்டு ஆண்டுக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்யத் தவறினால் இனி இவ்வாறான ஓர் சந்தர்ப்பம் எப்போதும் கிடைக்கப் பெறாது.

இரண்டாவது பாடமாவது, நாட்டை நெருப்பு வைத்த சிங்கள கடும்போக்காளர்களை கட்டுப்படுத்துவதற்கு ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு ஏன் முடியாமல் போனது. தூரப் பிரதேசமான திகனவில் இடம்பெற்ற தனிப்பட்ட சம்பவமொன்று ஒட்டுமொத்த நாட்டையே ஸ்தம்பிதம் தடைய செய்து பீதியடைச் செய்யக்கூடிய இன வன்முறையாக மாறியதனை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது.

அதாவது நாம் நாடு மற்றும் சமூகம் என்ற அடிப்படையில் கற்றுக்கொள்ள தயாரில்லை என்ற பாடமாகும். நாடு என்ற ரீதியில் முன்னோக்கி செல்ல வேண்டுமாயின் நாட்டின் அனைத்து இன சமூகங்களுக்கும் சமமான பொருளாதார அரசியல், கலாச்சார உரிமைகள் வழங்கப்பட வேண்டும். நாட்டின் அரசியல் தலைவர்களது பொறுப்பு இந்த உரிமைகளை பெற்றுக் கொடுப்பது மட்டுமல்ல இந்த உரிமைகள் பற்றி சமூகத்தை தெளிவூட்டுவதுமாகும். குறிப்பாக நாட்டில் பெரும்பான்மை, சிறுபான்மை இன சமூகங்கள் வாழும் போது சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை உறுதி செய்தலும், பெரும்பான்மை சமூகத்திற்கு இருக்க வேண்டிய அந்யோன்ய கௌரவரம் மற்றும் அங்கீகாரத்தையும் சமூகத்திற்குள் புரையோடச் செய்ய வேண்டியது அரசியல் சமூகத் தலைமைகளின் கடப்பாடாகும்.

கடந்த காலங்களில் சிறிசேன அல்லது விக்ரமசிங்கவின் கீழ் இயங்கும் பாரிய ஊடக வலையமைப்புக்கள் அல்லது கட்சி அமைப்புக்களோ இந்த நாட்டின் சிறுபான்மை சமூகத்தின் சம உரிமைகளுக்காக குரல் கொடுக்கவில்லை என்பதுடன், இந்த கருத்தை பிச்சாரம் செய்யவும் இல்லை. (இந்த விடயம் வேலை செய்ய முடியாத சந்திரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது ஓர் ஒப்பந்த அடிப்படையிலானது போன்றதேயாகும்)

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வேதனையான குரலில் சொல்லுவதனைப் போன்று இந்த நாட்டின் முஸ்லிம் மக்கள் இந்த அரசாங்கத்தை நிறுவியது வெறும் கள்வர்களை பிடிக்க மட்டுமல்ல. தமக்கு சுதந்திரமாக வாழக்கூடிய உரிமைகளை பெற்றுக்கொள்வதற்குமாகும். அவர் கூறுவது போன்று இந்த விடயத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் தோல்வியடைந்துள்ளனர்.

தங்களை ஆட்சி பீடம் ஏற்றிய மக்களை பாதுகாக்கத் தவறிய மைத்திரிபால சிறிசேனவையும், ரணில் விக்ரமசிங்கவையும் அரசியல் துஸ்டர்களாக அடையாளப்படுத்தினால் அது பிழையாகாது.

இந்த நாட்டு முஸ்லிம்கள் மீது மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலம் முழுவதிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. ராஜபக்ஸக்கள் இந்த மிலேச்ச செயல்களுக்கு உதவினார்களே தவிர குற்றவாளிகளை தண்டிக்கவில்லை. ரணில், சிறிசேனவும் இது வழியையே பின்பற்றினர். மேலும், ஆலுத்கம பிரதேசத்தில் வன்முறையில் ஈடுபட்ட ஞானசாரவிற்கு ஜனாதிபதி ஆலோசகரின் அடைக்கலம் கிடைக்கப்பெற்றது.

சிங்கள கடும்போக்காளர்களின் முஸ்லிம் எதிர்ப்பு கொள்கைகளை தோற்கடிப்பதற்கு மாறாக அரசாங்கம் இந்தப் பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் விட்டது. கிங்தொட்டவில், அம்பாறையில் இதுவே நடந்தது. தூர நோக்குடைய அரசியல்வாதி என்றால் திகனவில் ஆரம்பித்து வியாபித்த வன்முறைகளை முன்கூட்டியே உணர்ந்து கொண்டிருக்க முடிந்திருக்கும்.

எனினும், சிறிசேன, ரணிலை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் ஆசையில் இருந்ததுடன், ரணில் பிரதமர் மோகத்தில் பார்வையிழந்தார். யுத்தத்தின் பின்னர் புதிய எதிரியை தேடும் சிங்கள, தமிழ் ஆகிய இரண்டு சமூகங்களும் இஸ்லாமிய பீதியை இதற்கான மாற்றீடாக கொண்டுள்ளன. முஸ்லிம் விரோத செயற்பாடுகளின் விளைவாக நாட்டில் சர்வதேச இஸ்லாமிய தீவிரவாதம் தலைதூக்கினால் தலைமுறைகள் யுத்தத்தில் வாழ வேண்டியேற்படும்.

நாம் கற்றுக்கொள்ளாத பாடம் இதுவாகும்.

இந்த நாட்டின் வன்முறை வரலாற்றுக்கு உரிய மற்றுமொரு முக்கிய பாடத்தை அண்மையில் ஆரம்பமான ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கு சமாந்திரமாக நடைபெறும் கூட்டமொன்றில் கேட்க முடிந்தது. இலங்கையில் காணாமல் போனோரின் உறவினர்கள் மற்றும் காலமாறு நீதிப் பொறிமுறைமை குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி பப்லோ தி கிரிப் ஆகியோர் வெளியிட்டிருந்தனர். மனிதஉரிமைப் பேரவையும் ஜெர்மன் தூதரகமும் இணைந்து இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

வடக்கிலிருந்து வந்த தாய்மார் தங்களது வேதனைகளை கொட்டித் தீர்த்த பின்னர் தற்போது இந்த நாட்டில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது. தமது பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் இந்த அலுவலகம் பயனற்ற ஒன்றாக மாறியுள்ளது எனவும் இந்த அலுவலகம் குறித்து நம்பிக்கையில்லை எனவும் காணாமல் போனோரின் தாய்மார் தெரிவித்துள்ளனர்.

தெற்கில் காணாமல் போனோர் தொடர்பில் பிரித்தானிய தூதரக அதிகாரியொருவர் கேள்வி எழுப்பிய போது, காணாமல் போனோரின் உறவினர்குள் பின்வருமாறு கூறியிருந்தனர்.

‘எமது பிள்ளைகள் தமிழ் என்ற காரணத்தினால் காணாமல் போனோர்கள், தெற்கில் அவ்வாறு கிடையாது, ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் காணாமல் போவதும், சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் காணாமல் போவதும் வழமையானதே, எனவே அவர்களுடன் எமக்கு எவ்வித கொடுக்கல் வாங்கல்களும் கிடையாது’ என தெரிவித்துள்ளனர். தெற்கில் ஜே.வி.பி அரசியல் காரணமாக ஆயிரக் கணக்கானவர்கள் காணாமல் போனார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. அல்லது அதனை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. மேலும் வடக்கில் தமிழ் குழுக்கள் செய்த கடத்தல்களையும் மறந்துவிட்டனர்.

தங்களது பிள்ளைகள் காணாமல் போன தாய்மாரின் வேதனை இனம், மதம் அடிப்படையில் இருக்க வேண்டியதில்லலை. எனினும், இந்த தாய்மார்களின் நியாயமான கோபம், அவர்களை தனித்து போராடுவதற்கு உந்துமளவிற்கு தர்க்க ரீதியற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை வருத்தமளிக்கின்றது. ஒன்றிணைவதற்கு பதிலாக பிரிந்து கொள்வது பலவீனமானது என்பதனை கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் அல்லவா?

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் செய்யப்படுகின்றன. இந்த விடயம் குறித்து உலக அளவில் நிபுணத்தும் கொண்ட பெப்லோ இவ்வாறு கூறுகின்றார். ‘ஆர்ஜடின்டீனாவிலும், ச்சிலியிலும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுக்கள் நிறுவிய போது பல்வேறு எதிர்ப்புக்கள் கிளம்பின, பாதிக்கப்பட்டோர் இது பலனற்றது என கூறினர். எனினும் இந்த இரண்டு ஆணைக்குழுக்களும் சிறந்த முறையில் தங்களது கடமைகளை மேற்கொண்டிருந்தன.’

‘இவ்வாறான ஆணைக்குழுக்கள் நிறுவும் போது நான் இரண்டு தரப்பினருக்கும் மாறுபட்ட கருத்துக்களை கூற விழைகின்றேன். இது உங்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பமாக கருதி ஆணைக்குழு உச்ச அளவில் வெற்றிகரமாக பணியை முன்னெடுக்க வேண்டும் எனவும், இதனை மற்றுமொரு சந்தர்ப்பமாக கருதி பாதிக்கப்பட்டவர்கள் ஆணைக்குழுவின் பணிகளில் இணைந்து கொள்ளுமாறு கோருகின்றேன்’

எனினும், பெப்லோவின் அனுபவத்தை பாடமாகக் கொண்டு ஏற்றுக்கொள்வதற்கு வர வர தீவிரமடையும் அரசியல் கடும்போக்குச் சக்திகள் ஆயத்தமில்லை என்பது புலனாகின்றது.

பாடங்களைக் கற்றுக்கொள்ளாத சமூகமொன்றுக்கு முன்நோக்கி நகர முடியுமா

நன்றி : விகல்ப

ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரியவின் ஆக்கமொன்று தமிழில் குளோபல்  தமிழ் செய்திகள்….

கட்டுரையின் உள்ளடக்கத்திற்கு கட்டுரையாளரே பொறுப்பு…

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More