பங்களாதேசுக்கு சொந்தமான விமானம் ஒன்று நேபாளத்தின் காத்மாண்டு நகர விமான நிலையத்தில் விழுந்து தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 50 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். பங்களாதேஸ் தலைநகர் டாக்காவில் இருந்து 67 பயணிகளுடன் காத்மண்டுவுக்கு புறப்பட்ட யூ.எஸ்-பங்களா ஏர்லைன்ஸ் விமானம் இன்று காத்மாண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது.
விமானம், தரை இறங்கி, ஓடுபாதை எல்லைக்குள் பிரவேசித்தபோது, கட்டுப்பாட்டை இழந்து, ஓடுபாதையில் இருந்து விலகிசென்று அருகாமையில் உள்ள கால்பந்து மைதானத்திற்குள் விழுந்து தீ பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து விமான நிலைய மீட்புப் படையினரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு சென்று விமானத்துக்குள் உயிருக்கு போராடிய சிலரை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் குறைந்தது 50 பேர் உயிரிழந்ததாகவும், விமானத்தின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் நேபாள நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன