ஈழத்தின் பிரபல சமய இலக்கியச்சொற்பொழிவாளரும் மூத்த சைவத்தமிழறிஞருமான திருமதி வசந்தா வைத்தியநாதன் தனது 81 ஆவது வயதில் நேற்று (13.03.2018) காலை காலமானார். கொழும்பு விவேகானந்த சபை, அகில இலங்கைக் கம்பன் கழகம் போன்ற அமைப்புகளின் ஸ்தாபக உறுப்பினரான அம்மையார் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஆலோசகராகவும் செயற்பட்டார்.
ஈழத்திலும் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் ஆயிரக்கணக்கான ஆலய மற்றும் மாநாட்டு சொற்பொழிவுகளை ஆற்றி இம்மண்ணிற்கு பெருமைசேர்த்தவராவார். ஆலயத் திருவிழாக்களை நேர்முக வர்ணனை செய்வதில் தனித்துவம் வாய்ந்தவராகச் செயற்பட்டார்.
தமிழ்நாடு மயிலாடுதுறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் நீர்வேலியைச் சேர்ந்த வர்த்தகவங்கி வடமாகாண பிராந்திய முகாமையாளராய் இருந்த அமரர் எஸ். வைத்தியநாதசர்மா அவர்களைத் துணைவியார் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நாளை 15.03.2018 வியாழக்கிழமை காலை 8.00 மணியிலிருந்து வைக்கப்பட்டு, இறுதிச் சடங்கு 10.30 மணியளவில் இடம்பெற்று தகனக்கிரியைகளுக்காக கல்கிசை மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.