சமூக வலைதளங்களும், இணையவழிக் குற்றங்களும் காவல்துறை, புலனாய்வுத் துறை போன்ற சட்ட அமுலாக்க அமைப்புகளுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று ஆரம்பமாகிய காவல்துறை தலைவர்களின் ஆசிய – பசிபிக் பிராந்தியக் கருத்தரங்கினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பங்களும், அறிவியல் கண்டுபிடிப்புகளும் ஆதிக்கம் செலுத்தும் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் தொழில்நுட்பங்களை தவிர்த்துவிட்டு வாழ முடியாது என்ற சூழ்நிலை தள்ளப்பட்டுள்ளோம் எனத் தெரிவித்த அவர் நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பங்கள் அத்தியாவசியமானவை என்ற போதிலும் அவற்றால் பல பிரச்சினைகளும், ஆபத்துகளும் ஏற்படுகின்றன என்பதனை மறுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இன்றைக்கு, அனைத்திலும் கணினியும், இணையமும் பெரும் பங்கு வகிக்கின்ற போதும் துரதிருஷ்டவசமாக, இணைய செயல்பாட்டை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் போதிய தொழில்நுட்பங்கள் நம்மிடம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துள்ளன எனவும் இணையவழித் தாக்குதல்கள் எங்கு வேண்டுமானாலும் நடைபெறலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது எனவும் தெரிவித்த அவர் இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் இணையவழித் தாக்குதல்கள் நடந்து வருகின்றன எனவும் இது மிகவும் தீவிரமான பிரச்சினையாகும் எனவும் தெரிவித்துள்ளர்h.
மேலும் சமூக வலைதளங்களும் பல்வேறு சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகளுக்கு அடிப்படையாக விளங்குகின்றன எனவும் தீவிரவாதச் செயல்களுக்கும், தீவிரவாதத்தின் பக்கம் இளைஞர்களை இழுக்கவும் சமூக வலைதளங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன எனவும் இவையாவும், காவல்துறை, புலானாய்வு துறை போன்ற சட்ட அமுலாக்க அமைப்புகளுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.