குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாட்டிறைச்சி விற்க தடை விதித்தால் , மாடு கடத்துவது நிகழாது என காவல்துறையினர் கூறிய கூற்றை தான் ஏற்றுக்கொள்ள வில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை காவல்துறை அதிகாரிகளுக்கும் முதலமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் , அது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
தீவக பகுதிகளில் இருந்து களவாடப்பட்ட மாடுகள் சட்டவிரோதமாக கடத்தப்படுவது குறித்து காவல்துறை தான் அதிகாரிகளுடன் பேசியதாகவும் அதற்கு அவர்கள் மாட்டிறைச்சி விற்கப்படுவதால் தான் மாடுகளை இறைச்சிக்கு கடத்து கின்றார்கள். அதனால் மாட்டிறைச்சி விற்க தடை விதித்தால் மாடுகள் கடத்தப்பட மாட்டாது என கூறினார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
எனினும் தான் அதனை ஏற்றுக்கொள்ள வில்லை எனவும் மாட்டிறைச்சி விற்பனையை தடை செய்ய முடியாது. மாட்டிறைச்சியை உணவாக உட்கொள்வோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என அவர்களிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாடு கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை அதிகாரிகள் உறுதி தந்தனர் எனவும் அவர் தெரிவித்தார்.