மகாராஷ்டிர மாநிலத்தில் எதிர்வரும் 18-ம் திகதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில் மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராம்தாஸ் கதம் சட்டமன்றத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்
மகாராஷ்டிரவின் புத்தாண்டு முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது எனவும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, பயன்பாடு, இருப்பு வைத்தல், விற்பனை, ஏற்றுமதிக்கு இந்த தடை உத்தரவு பொருந்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தடையை மீறுவோருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
அதேவேளை மருந்துகள், வனம் மற்றும் தோட்டக்கலை தயாரிப்புகள், திடக் கழிவு மற்றும் மரக் கன்றுகளை பிளாஸ்டிக் பயன்படுத்தி பொதி செய்வதற்கும், ஏற்றுமதி தேவைகளுக்காக சிறப்பு பொருளாதார மண்டலங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கும் அனுமதிக்கும் வகையில் இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் அமைச்சர் ராம்தாஸ் கதம் தெரிவித்துள்ளார்