கடந்த 2016-ம் ஆண்டில் நாடுமுழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் 229 வழக்குகளில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் அலாக் அலோக் சிறீவஸ்தவா உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு பொதுநலன் மனுத்தாக்கல் செய்து இருந்தார். அதில், தனது உறவினரின் 8மாத குழந்தை சமீபத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டது. இதுபோல் நாடுமுழுவதும் ஏராளமான இளம்பிஞ்சுகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
தேசிய குற்ற ஆவண அறிக்கையின்படி, கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் ஒரு லட்சத்து ஆயிரத்து 326 குழந்தைகள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் 229 வழக்குகள் மீது மட்டுமே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
70 ஆயிரத்து 485 வழக்குகள் கடந்த 2015-ம் தொடரப்பட்டுஅது 2016ம் ஆண்டுக்கு மாற்றப்பட்டுள்ளது, புதிதாக போஸ்கோ சட்டத்தின் கீழ் 30 ஆயிரத்து 891 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து ஆயிரத்து 136 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த வழக்குகளை 6 மாதங்களுக்குள் விசாரித்து தீர்வு காண நெறிமுறைகள், வழிகாட்டுதல்கள் வகுக்க வேண்டும் எனக் கேட்டு இருந்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டிஓய் சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அவர் பிறப்பித்த உத்தரவின் படி, நாடுமுழுவதும் குழந்தைகள் பாலியல் வழக்குகள் குறித்த எண்ணிக்கையை கணக்கெடுக்கவும், எத்தனை வழக்குகள் நிலுவையில் இ ருக்கிறது என்பதை உயர் நீதிமன்றங்கள் 4 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர். மேலும் மாவட்ட வாரியாக எத்தனை வழக்குகள் இருக்கின்றன என்பது குறித்த அறிக்கையையும் உயர் நீதிமன்ற பதிவாளர்கள் அளிக்கவும் ஆணையிட்டு இருந்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன் உயர் நீதிமன்ற பதிவாளர்கள் அறிக்கை அளித்தனர். அதில் குழந்தைகளுக்கான எதிரான பாலியல் பலாத்கார வழக்குகள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவை நிலுவையில் இருப்பதாகவும், அனைத்தும் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டவை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை ஏப்ரல் 20-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். (இந்து)