வடக்குமாகாணக் கல்வித்திணைக்களத்தினர், தமது எல்லைக்குட்பட்ட பன்னிரு வலயங்களிலும் ‘தொழில் வழிகாட்டல் செயலமர்வினை’ நடாத்திவருகின்றனர். 2018.03.02 யாழ் இந்து மகளிர் கல்லூரியில் மாகாணக் கல்விப் பணிப்பாளர் தலைமையில், கல்வியமைச்சரின் பிரதமஅதிதிப் பிரசன்னத்துடன், மாகாண உளசமூக வளநிலைய உதவி முகாமையாளர் உதயகலா சிவபாதசுந்தரத்தின் நெறிப்படுத்தலில், மாணவர்களுக்கான ‘உயர்கல்வி மற்றும் தொழில் வாழ்க்கை வழிகாட்டல் கருத்தமர்வு’ ஆரம்பமானது.
வடமாகாணத்திற்குட்பட்ட பன்னிரு வலயங்களிலும் உள்ள 16500 மாணவர்களை இலக்காகக் கொண்டு இக்கருத்தமர்வு நடைபெற்று வருகிறது. அந்தந்த, வலயங்களினுடைய கல்விப் பணிப்பாளர்களின் தலைமையில் உளசமூக வளநிலையத்தினால் தயார்ப்படுத்தப்பட்ட வளவாளர் குழுவினரால், மிகவும் அர்ப்பணிப்புடன் இக்கருத்தமர்வு செயற்படுத்தப்படுகிறது.
உயர்தரக் கற்கைப் பாடத் தெரிவு, 13 ஆம் ஆண்டுக் கட்டாயக்கல்வி, உயர் கல்வி வாய்ப்புக்களும் வழங்கும் நிறுவனங்களும், பல்கலைக்கழக இணையவழி நுழைவுப்படிவம் நிரப்பும்வழி, பல்கலைக்கழகம் அல்லாத வேறு உயர் கற்கை வழிகள், தேசிய தொழில் தகமைச் சான்றிதழ் முறைமைகளும் (NVQ) வழங்கும் நிறுவனங்களும், சுயவிபரப் படிவம், நிலையறி மதிப்பீடு, கருத்தமர்வு பற்றிய மதிப்பீடு போன்றவை முக்கியமான அம்சங்களாக இருந்தன.
மார்ச் 2, 3, 5,6,7,9,12,13,14,15,16 ஆகிய திகதிகளில் முறையே யாழ்ப்பாணம், வலிகாமம், தீவகம், வடமராட்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு, துணுக்காய், கிளிநொச்சி ஆகிய வலயங்களில் பயனுறு வழிப்படுத்தலாக நடைபெற்றன. நிறைவாக மடு வலயத்திற்கான அமர்வுகள் அடம்பன் ம.ம.வி. இல் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளன. நடைபெற்று முடிந்த வலயங்களில், பெருந்திரளான மாணவர்கள் வருகைதந்திருந்தமையும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றவர்கள் தமது பிள்ளைகளை ஆர்வத்துடன் அழைத்து வந்திருந்ததனையும் அவதானிக்கக்கிடைத்தது. அத்துடன்.. ஆறுதலாகவும் தெளிவாகவும் வளவாளர்கள் இன்முகத்துடன் விளங்கப்படுத்திக்கொண்டிருந்தமை, அவர்களது துறைசார் பட்டறிவையே வெளிப்படுத்தியுள்ளதென செயலமர்விற்கு வருகைதந்திருந்தவர்கள் தமக்குள் பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது.