பண்புமிக்க உயர் பெறுமதியுள்ள அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்காக மக்கள் பிரதிநிதிகள் தமது நடத்தைகளாலும் செயற்பாடுகளாலும் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினதும் பிரதிநிதிகளுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த கால அட்டவணைக்கேற்ப மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு தமது உயரிய பங்களிப்பினை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதன்போது பொதுமக்களுடன் பிரச்சினை ஏற்படுத்திக்கொள்ளாது கொள்கைகளுக்கு உட்பட்டு பொறுமையாகவும் அவதானத்தோடும் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.