ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா முறைப்படி வெளியேறுவதற்கான ஒப்பந்தத்தின் மிக முக்கியமான விடயத்தை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரெக்சிற் பேச்சாளர்களான மைக்கேல் பார்னியர் மற்றும் டேவிட் டேவிஸ் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தை செயற்படுத்துவதற்கான பிரித்தானியாவின்; முயற்சியில் இது ஒரு தீர்க்கமான முடிவு எனத் தெரிவித்துள்ளனர்.
இருதரப்பினருக்கும் இடையேயான நிரந்தர உறவை கருத்திற்கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான காலம் 2019ஆம் ஆண்டு மார்ச் 29 இல் தொடங்கி 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் முடிவடையும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தக்காலத்தின்போது பிரித்தானியாவுக்குள் வரும் ஏனைய ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள், ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பு பெற்ற உரிமைகளை பெறுவதை உறுதியளிக்கும் விடயத்துக்கு பேச்சுவார்த்தையின்போது ஒப்புதல் அளிக்கப்பட்டதாக பார்னியர் தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் மாநாட்டில், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான காலம் சார்ந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு தெரீசா மேவின் சக தலைவர்கள் கையெழுத்திடுவார்கள் எனவும் இருதரப்பினரும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.