குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்திற்கு முன்பாக வடமாகாண தொண்டராசிரியர்கள் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். நிரந்தர நியமனம் வழங்க தாமதமாவதாக தெரிவித்து முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் கல்வி வலயத்தைச்சேர்ந்த தொண்டராசிரியர் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வடமாகாண முதலமைச்சர் அலுவலகம் முன்பாக வடமாகாண தொண்டராசாரியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
வடமாகாணத்திலுள்ள 680 தொண்டராசாரியர்களில் 182 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் அதில் முறைகேடுகள் இடம்பெற்று உள்ளதாகவும் அதை நிறுத்தி சகல தொண்டராசிரியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்க கோரி ஏனைய 490 வடமாகாண தொண்டராசிரியர்கள் கடந்த காலங்களில் மேற்கொண்ட போராட்டங்களையடுத்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தலையீட்டால் குறித்த நியமனம் நிறுத்தப்பட்டிருந்தது
இருந்தும் இம்மாதம் மீண்டும் குறித்த 182 பேருக்கும் நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவைச்சேர்ந்த குறித்த ஆசிரியை நேற்றையதினம் தற்கொலை செய்ததாக இவர்கள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து இன்று வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்திற்கு முன்பாக கூடிய தொண்டராசிரியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்
இவர்களை வடமாகாண முதலமைச்சர் அழைத்து சந்தித்ததுடன் இவ்விடயம் தொடர்பில் கேட்டறிந்தார். அத்துடன் இவ்வடயம் தொடர்பில் மத்திய கல்வி அமைச்சிற்கு உடன் தெரியப்படுத்தி தாம் பதிலை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.