பங்களாதேசில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்கியா சிறுமிகள் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மாரின் ரக்கினே மா நிலத்தில் இடம்பெற்றுவரும் உள்நாட்டுப் போர் காரணமாக சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அகதிகளாக பங்களாதேஸ் சென்றுள்ளனர்.
இந்த ரோஹிங்கியா இன மக்கள் அங்கு அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளநிலையில், முகாம்களில் உள்ள சிறுமிகள் பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்று குழு ஒன்றினை அங்கு விசாரணை மேற்கொண்டது.
இதன் போது அகதிகள் முகாம்களில் இருக்கும் பெரும்பாலான சிறுமிகள் பெற்றோரை இழந்தவர்களாக உள்ளதாகவும் அவர்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை என்பதனை சாதகமாக பயன்படுத்தி பல கடத்தல்காரர்கள் சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு உட்படுத்துகின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், வேலை வாங்கி தருவதாக கூறி பல நகரங்களுக்கு சிறுமிகள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்படுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பல முகவர்கள் முகாம்களில் உள்ளனர் எனவும் அவர்கள் வெளிப்படையாகவே இந்த தொழிலை செய்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.