இந்தியாவில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட சீக்கிய இளைஞர்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பயிற்சி அளித்து வருகிறது என இந்திய மத்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
பாஜகவின் சிரேஸ்ட தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையில் நடைபெற்ற மதிப்பீடுகளுக்கான நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய உள்துறை அமைச்சு அளித்த அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குள் பல்வேறு தீவிரவாதிகள் ஊடுருவி தீவிரவாதச் செயல்களை ஊக்குவித்து வருகின்றனர் எனவும் இதற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவி வருகிறது எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா, கனடாவில் வசிக்கும் சீக்கிய இளைஞர்களை இந்தியாவுக்கு எதிராகத் தூண்டி விடும் வேலையைவும் ஐஎஸ்ஐ செய்து வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா குறித்து தவறான கருத்துகளைக் கூறி மூளை சலவை செய்து, சீக்கிய இளைஞர்களை இந்தியாவுக்கு எதிராகத் தூண்டி விடுகின்றனர் எனவும் இணையதளம், சமூக வலை தளங்கள் மூலம் சீக்கிய இளைஞர்கள் கண்டறியப்பட்டு அவர்களை இந்தியாவுக்கு எதிராக ஐஎஸ்ஐ திருப்புகிறது எனவும் இதனைத் தடுப்பது பெரும் சவாலாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
சீக்கிய இளைஞர்களுக்கு பாகிஸ்தானிலுள்ள ஐஎஸ்ஐ முகாம்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறையில் இருந்து திரும்பியவர்கள், வேலையில்லாத இளைஞர்கள், கடத்தலில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ பயிற்சி வழங்குகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.