முத்துராஜவல சரணாலய பிரதேசத்தில் இடம்பெறும் நிர்மாணப்பணிகள், மண் நிரப்பும் பணிகள் உள்ளிட்ட சுற்றாடல் அழிவுக்குக் காரணமாக அமையக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக தடைசெய்யுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ; சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அங்கு காணிகளை நிரப்புவதற்கு எந்தவொரு அரச நிறுவனத்தினாலும் அனுமதி வழங்கப்பட்டிருக்குமாயின் அவை அனைத்தையும் இரத்துச் செய்யுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
இத்தகைய சுற்றாடல் அழிவு நடவடிக்கைகளுக்கு அனுசரணை வழங்கும் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தினார்.
நாட்டின் முக்கியமான ஈரநில பிரதேசமான முத்துராஜவல சரணாலயத்தை அண்மித்ததாக மேற்கொள்ளப்படும் சுற்றாடல் அழிவுகள் குறித்து அண்மையில் தொடர்ச்சியாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுவந்த நிலையில், இது தொடர்பாக கவனம் செலுத்திய ஜனாதிபதி இன்று அதிகாலை அப்பிரதேசத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அப்பிரதேசத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இத் தீர்மானங்களை மேற்கொண்டிருந்தார்.
சுற்றாடல் பாதுகாப்பு பிரதேசமாக இங்குள்ள அனைத்து காணிகளையும் வனசீவராசிகள், சுற்றாடல் பாதுகாப்பு வலயமாக வர்த்தமானி மூலம் அறிவிப்புச் செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து சட்ட ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
காணி உறுதிகளைக்கொண்ட காணிகள் என்றபோதிலும் சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருந்தால் அக்காணிகளில் மண் நிரப்புவதற்கோ அல்லது நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்கோ இடமளிக்க முடியாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், இந்த செயற்பாடுகளின் பின்னால் அரசியல் அழுத்தங்கள் இருக்குமானால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
முத்துராஜவல சரணாலய பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் சுற்றாடல் அழிவுகளை கட்டுப்படுத்துவதற்கு இப்பிரதேசத்தில் பொலிஸ் விசேட படையணியின் பாதுகாப்பை வழங்குமாறும், உட்பிரவேசிக்கின்ற வழிகளுக்கு வீதித் தடைகளை ஏற்படுத்துமாறும் ஜனாதிபதி காவல்துறை மா அதிபருக்குப் பணிப்புரை விடுத்தார்.
இப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் மண்நிரப்பும் பணிகளுக்காக மண்ணை வழங்கும் இடங்களுக்கு புவிச்சரிதவியல், சுரங்கப் பணியகத்தினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருக்குமாயின் அவற்றையும் உடனடியாக இரத்துச் செய்யுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.