குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் இளைஞர் ஒருவரை சுட்டு படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட விஷேட காவல்துறை அதிரடிப்படையின் புலனாய்வு உத்தியோகஸ்தர்கள் இருவரையும் நிபந்தனை அடிப்படையிலான பிணையில் செல்ல யாழ். மேல் நீதிபதி அனுமதி அளித்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டு ஒக்ரோபர் 22ஆம் திகதி அரியாலை கிழக்கு மணியம்தோட்டம் வசந்தபுரம் முதலாம் குறுக்கு வீதிப் பகுதியில் 24 வயதுடைய டொன்பொஸ்கோ டினேசன் என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
இளைஞர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் யாழ்ப்பாண தலைமையக காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு பின்னர் காவல்துறை மா அதிபரின் பணிப்பின் பேரில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குற்றப்புலனாய்வு பிரிவினரால் கடந்த நவம்பர் மாதம் 3ஆம் திகதி யாழ் பொலிஸ் விஷேட அதிரடிப் படை புலனாய்வாளர்களான மல்லவ ஆராய்ச்சிகே பிரதீப் நிசாந்த மற்றும் ரத்நாயக்க முதியான்சலாகே இந்திக புஸ்பகுமார ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் இருவரும் அன்றிலிருந்து யாழ்ப்பாணம் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அந்நிலையில் குறித்த இரு சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணி மோகனதாஸ் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் பிணை விண்ணப்பம் செய்தார்.
அதன் போது குறித்த இரு சந்தேக நபர்களையும் கண்கண்ட சாட்சியம் நீதிவான் நீதிமன்றில் அடையாளம் காட்டவில்லை. அத்துடன் சந்தேக நபர்களிடம் இருந்து மீட்கபட்ட துப்பாக்கியும் சம்பவ இடத்தில் மீட்கப்பட்ட வெற்று தோட்டாக்களும் இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டு இருந்தன.
அவற்றை பகுப்பாய்வு செய்த அதிகாரிகள் குறித்த கைத்துப்பாக்கியில் இருந்தது தான் இந்த தோட்டாக்கள் சென்றது என்பதனை அறுதியாக கூற முடியாது உள்ளது. என நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கை கொடுத்துள்ளனர்.
எனவே சந்தேகநபர்கள் இருவரையும் தகுந்த பிணை நிபந்தனையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரினார்.
அதனை அடுத்து அரச சட்டவாதி நாகரத்தினம் நிஷாந்த் குறித்த வழக்கு விசாரணைகள் முடிவுறுத்தப்பட்டு உள்ளதாக குற்றபுலனாய்வு பிரிவினர் அவதானிப்புக்களை அறிய தந்துள்ளார்கள். அந்த அவதானிப்புக்களின் பிரகாரமும் , எனக்கு கிடைத்த தகவலின் அடிபடையிலும் சந்தேக நபர்கள் பிணையில் செல்வதற்கு ஆட்சேபனை இல்லை என தெரிவித்தார்.
அதனை அடுத்து நீதிபதி இருவரையும் , தலா 50 ஆயிரம் ரூபாய் காசு பிணையிலும் , இரண்டு இலட்ச ரூபாய் பெறுமதியுடைய இரண்டு ஆள் ;பிணையிலும் செல்ல அனுமதித்தார்.
அத்துடன் சந்தேகநபர்கள் இருவரும் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பில் உள்ள குற்றபுலனாய்வு திணைக்களத்தில் காலை 09 -12 மணிக்கு இடையில் கையொப்பம் இட வேண்டும். கடவு சீட்டு இருந்தால் அதனை நீதிவான் நீதிமன்றில் ஒப்டைக்க வேண்டும். வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்படுகின்றது. என நீதிபதி கட்டளையிட்டார்.
அத்துடன் இந்த நீதிமன்ற கட்டளையை குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டும் என நீதிமன்ற பதிவாளருக்கு பணிப்புரை விடுத்தார்.