கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா (Cambridge Analytica) என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேஸ்புக் பயனாளிகளின் விவரங்கள் அவர்களுக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட பிரச்சனை இப்போது பெரிதாகி இருக்கிறது. பலரும் பேஸ்புக் பாதுகாப்பானது இல்லை என குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள். இதனால் பலரது அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின் பெரிய திட்டமிடலும், தொழில்நுட்ப பலமும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரபல சனல் 4 தொலைக்காட்சியே இந்த முறைகேட்டை கண்டுபிடித்தது. அவர்கள் நடத்திய ஸ்டிங் ஒபரேஷன் மூலம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா (Cambridge Analytica) நிறுவனம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா (Cambridge Analytica) நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி அலெக்ஸாண்டர் நிக்ஸ் வீடியோவில் இதனை ஒப்புக்கொள்வது வெளியாகி உள்ளது.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா (Cambridge Analytica) லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் ஆகும். தேர்தல் ஆலோசனை மையம் என்ற பெயரின் கீழ் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. உலகம் முழுக்க தேர்தல் தொடர்பான குழப்பங்களை தீர்க்க ஆலோசனைகளை வழங்கி, வெற்றி பெற வழிகாட்டி வருகிறது.
பேஸ்புக் மூலம் பல கோடி மக்களின் தகவல்களை திருடி இருக்கிறார்கள். தேர்தல் சமயங்களில் அந்த தகவலை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார்கள். அதே போல் ஒவ்வொரு பேஸ்புக் பயனாளிகளையும் மயக்கும் வகையில் தேர்தல் விளம்பரங்களை, அவர்கள் திருடிய தகவலை வைத்து உருவாக்குகிறார்கள். இதுவரை மொத்தம் 50 மில்லியன் பேஸ்புக் கணக்குகளில் விவரங்களை இவர்கள் திருடி இருக்கிறார்கள். 50 மில்லியன் மக்களின் தகவலை வைத்து அவர்களை எப்படி எல்லாம் தேர்தலில் மாற்றி வாக்குப் போடா வைக்க முடியுமோ அப்படி எல்லாம் செயல்பட வைப்பார்கள். இதற்கு உலகின் தொழில் நுட்ப ஜாம்பவான்கள் பணியாற்றியுள்ளார்கள்.
உங்கள் ஊர் உதாரணமாக உங்கள் தெருவில் இரண்டு பேர் தேர்தலில் நிற்கிறார்கள். ஒருவர் குப்புசாமி, ஒருவர் கருப்பு சாமி. குப்புசாமி கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்திடம் பணம் கொடுத்தார் என்றால் , குப்புசாமியை பற்றிய நல்ல தகவல்களை மட்டுமே உங்களுக்கு பிடித்தது போல பேஸ்புக்கில் கட்டுரைகளாக வர வைப்பார்கள், மேலும் கருப்புசாமி குறித்து மோசமான கட்டுரைகளை வர வைப்பார்கள். இதன் மூலம் ஒரு தலைவர் பற்றிய உங்கள் பார்வையை மாற்றி உங்களை வேறு ஒரு நபருக்கு வாக்குப் போட வைப்பார்கள்.
அமெரிக்க தேர்தலில் டிரம்ப் இப்படித்தான் வெற்றி பெற்றார் என்ற சர்ச்சை நிலவி வருகிறது. அதேபோல் ஐரோப்ப யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற நடந்த வாக்கெடுப்பில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பங்கெடுத்திருப்பதாக வேலை செய்தது அம்பலம் ஆகி உள்ளது. இந்த வகையில் பேஸ்புக் மூலம் மக்கள் மனதை மாற்றுவதோடு, பணம் கொடுத்து அதிகாரிகளையும் விலைக்கு வாங்குகிறார்கள். தேர்தலில் நேரடியாக மோசடி செய்ய அதிகாரிகளுக்கு நிறைய தரகு பணம்கொடுத்து இருக்கிறார்கள். விலைமாதுக்களை ஏற்பாடு செய்வது, லஞ்சம் கொடுப்பது, வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பது, பதவி உயர்வு கொடுப்பது என பல வேலைகளை செய்து இருக்கிறார்கள் என கூறப்படுகிறது.
தகவல் திரட்டுவது எப்படி இவர்கள் பேஸ்புக் கணக்கில் தகவல்களை திருடுவது மிகவும் சுவாரசியமான ஒன்று. பேஸ்புக்கில் சமயங்களில் சில விளையாட்டுகள் வைரல் ஆகும். அதை கிளிக் செய்தால் நமக்கு எப்போது திருமணம் நடக்கும், நமக்கு எப்போது மரணம் வரும், முன்ஜென்மத்தில் எப்படி இருந்தோம் என்று சொல்லும். இந்த லிங்குகளை கிளிக் செய்யும் போது, நம்முடைய தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் எடுத்துவிடும். இப்படித்தான் உலகம் முழுக்க 50 மில்லியன் கணக்குகளை அபேஸ் செய்து இருக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இலங்கையில் அடுத்து நடக்கும் தேர்தலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் எனக் கூறி இரண்டு பேர் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவன அதிகாரிகளை சந்தித்து இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் உண்மையில் சனல் 4ல் வேலை பார்க்கும் பத்திரிக்கையாளர்கள். இவர்கள் எடுத்த வீடியோதான் இப்போது வெளியாகி உள்ளது. வீடியோ வெளியான ஒரு வாரத்திற்கு முன்பே இதைப்பற்றிய கட்டுரை வெளியாகிவிட்டது.
இதேவேளை முகப்புத்தகம் மேற்கொண்ட தவறினால் அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் மில்லியன் கணக்கான முகப்புத்தக பயனாளிகளின் தகவல்களை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதனை மார்க்மார்க் ஜுக்கர்பெர்க் ஒப்புக் கொண்டுள்ளார்.
கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக முகப்புத்தக பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளநிலையில் தவறினை ஏற்றுக் கொண்டுள்ள மார்க் நம்பிக்கை மீறல் நடைபெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தான் மிகவும் வருந்துவதாகவும் நேர்மையற்ற செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ள அவர் நாடாளுமன்றத்தின் முன் சோதனை நடத்தவும் தான் மகிழ்ச்சியுடன் தயாராக இருப்பதாதவும் தெரிவித்துள்ளார்.
மேலும் செயலிகள், பயனாளிகளின் தகவல்களை பெறுவது மிக கடுமையாக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். முகப்புத்தகத்தினை தான்தான ஆரம்பித்தது என்பதனால்; என்ன நடந்தாலும் தான்தான் பொறுப்பு எனவும் மார்க் தெரிவித்துள்ளார்.