சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பில் விசாரணை செய்யும் குற்றப்புலனாய்வுப் பிரிவின் சிறப்புக்குழு, லசந்த கொலை தொடர்பில் பாராளுமன்றல் பேசப்பட்ட கன்சாட் அறிக்கைகளை விசாரணைகளுக்காக கோரியுள்ளது.
இது தொடர்பில் கல்சிசை நீதிமன்ற நீதவானிடம் இடையிட்டு மனுவாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் லசந்த பயன்படுத்திய வங்கிக் கணக்குகள் மற்றும் அந்த வங்கிகளுடன் அவர் உரையாடிய தொலைபேசி இலக்கங்கள் தொடர்பிலும் குறித்த நிறுவனங்களுடாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிக்கை கோரியுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ள நீதிமன்றம், ஹன்சார்ட் அறிக்கை, தொலைபேசி தொடர்பிலான அறிக்கை மற்றும் வங்கிக்கணக்குகள் குறித்த அறிக்கைகளை குற்றப்புலனாய்வுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவுக்கு கையளிக்க, உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி தனது காரில் சென்று கொண்டிருந்த போது லசந்த கொல்லப்பட்டிருந்தார். தற்போது விசாரணைகளை மேற்கொண்டுவரும் விசாரணைக்குழுவின் அறிக்கையில் லசந்த சுட்டுக் கொல்லப்படவில்லை எனவும் அவர் கூரிய ஆயுதமொன்றினால் தலையில் தாக்கப்பட்டே கொல்லப்பட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
லசந்த கொலை தொடர்பில் சாட்சியங்களை மாறறியமை, அழித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கல்கிஸ்ஸ காவல் நிலையத்தில் குற்ற விசாரணைப் பிரிவிற்கு பொறுப்பாக கடமையாற்றிய துணை காவல்துறைப் பரிசோதகரும் மேல் மாகாணத்தின் தென்பகுதிக்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் பிரதிப் காவல்துறை மா அதிபர் பிரசன்ன நாணயக் காரவும் கைது செய்யப்பட்டு தற்போதும் விளக்கமறியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது