காலைக்கதிர் ஆசிரியர் தலையங்கம்…
ஈழத்தமிழரின்பால் நீங்காப் பற்றுக்கொண்டிருந்த ஒரு தமிழ் உணர்வாளனின் மரணம், வெறும் தமிழக அரசியல்வாதி என்ற ஏளனப் பார்வையுடன் கடந்து போயிருக்கின்றது.
‘சசிகலாவின் கணவர்’ என்ற அடையாளத்துடன் தமிழ் பற்றாளர் ம.நடராஜனின் மரணத்தை இலங்கைத் தமிழர்கள் வெறும் செய்தியாக நோக்கி, அத்தோடு புறம் தள்ளிச் சென்றிருக்கின்றமை வேதனையிலும் வேதனை.
ஈழத் தமிழர்களுக்காக என்றும் கொதித்துக் கொண்டிருந்த இதயம் அது. இலங்கைத் தமிழர்களின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றபோது அவர்களின் கனலும் ஆயுதங்களும் அடங்கின. ஆனால் தமிழ் மறவன் நடராஜனின் மனம் அடங்கவில்லை. ஈழத் தமிழர்களுக்காக இறுதிவரை கனன்று கொண்டிருந்த நெஞ்சம் அவருடையது என்பது மிகு வார்த்தையல்ல.
ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தைத் தமது உள்நாட்டு அரசியல் நடவடிக்கைகளுக்காகச் சாதகமாகப் பயன்படுத்தும் தமிழகத்தின் அற்ப அரசியல்வாதிகளினின்றும் அவர் முற்றும் வேறுபட்டிருந்தார். அந்தப் பணியை அவர் இன உணர்வாக ஆற்றினாரேயன்றி, அரசியலாகச் செய்யவேயில்லை. தமிழரின் ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டது. அதன் அடையாளமே இல்லாமல் செய்யும் கைங் கரியங்களே இங்கு தொடர்ந்து நடக்கின்றன. ஆனால், அந்தப் போராட்டத்தில் தம்மையே ஆகுதியாக்கிய ஈழமறவர்களுக்காக ‘நினைவழியா முற்றம்’ ஒன்றை மிகப் பெரும் செலவில் அமைத்து அந்தப் போராளிகளின் நினைவைத் தமிழி னம் காலம் காலமாகச் சுமந்து, நினைந்து போற்றுவதற்காக முள்ளி வாய்க்கால் முற்றத்தைத் தஞ்சையிலே அமைத்தவர் நடராஜன்.
ஈழப் போராட்டத்தின் பரிமாணங்களை ஒரே இடத்தில் தரிசிக்கக் கூடியதாக அதன் அடையாளங்களை உருக்கொடுத்து பிரமாண்டமான கட்டமைப்பாக உருவாக்கியிருக்கின்றார் அவர். உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறனை முன்னிறுத்தி, இதற்காகத் தனது முழு உதவிகளையும் வழங்கி, அர்ப்பணித்து, அதனை நிஜமாக்கிக் காட்டியிருக்கின்றார் நடராஜன். முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற அந்தப் பிரமாண்ட கட்டமைப்புக்குள் நுழைந்து சிற்பங்களையும், பல நூற்றுக் கணக்கான போராளிகள், மாவீரர்களின் படங்கள், ஓவியங்களையும் போராட்டம் பற்றிய ஆவணங்களையும் பார்வையிட்டால் ஈழப் போராட்டத்தின் கனதி, ஆழம், அர்ப்பணிப்பு, உயர்வு, அதற்குள் பொதிந்து கிடக்கும் அளவிடமுடியாத தியாகம், ஒப்பிட முடியாத வீரச் சிறப்பு எல்லாம் ஒரு தடவை நம்மை சிலிர்ப்பூட்டி உணர்வைக் கொப்பளிக்க வைக்கும். இலங்கையில் ஈழத் தமிழன் புரிந்த ஒப்புயர்வற்ற போராட்டத் தின் வரலாற்றுப் பதிவு ஒரு சிறிய பகுதியேனும் பொறிக்கப்பட்டிருப் பின், அது அவர் தஞ்சையில் அமைத்த முள்ளிவாய்க்கால் முற் றத்தில்தான் எனலாம்.
அதை உருவாக்கும் காலத்தில் இந்திய, தமிழக அரசுகள் சட்ட ரீதியாகவும், பிறவழிகளிலும் கொடுத்த தொல்லைகள், கஷ்டங் கள் ஏராளம். அவற்றை எல்லாம் சகித்துக் கொண்டும் தானும் ஒரு தமிழ் வீரமறவன் என்ற உணர்வுடன் அந்தப் பணிக்கு செயலுருக் கொடுத்து வெற்றி கண்டவர் நடராஜன். தமது சொந்த நிலத்தில், தமது சொந்தப் பணத்தில், தமது சொந்த உழைப்பில் ஈழத் தமிழர்களுக்காக ஆற்றிய அவரது அரும்பணி அது. ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை தலைவர் பிரபாகரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அந்த விடுதலை வேள்வியின் சரிதத்தை ‘டிஜிட்டல்’ திரையில் முழு ஆவணமாக்கும் முயற்சியே கடைசி வரை அவரது கனவாக இருந்தது.
ஈழத் தமிழர்களின் கடந்த காலப் போராட்டங்களை ஓரளவு பதிவுக்குள் கொண்டு வந்த அவர், அதனைக் கோத்து ஆரமாக் கும் முயற்சியாகச் சமகால எழுத்துருவாக்கிகள் பலருடனும் தொடர்பைப் பேணினார். இடையறாது பணியாற்றினார். ஆனாலும், நோயும், அரசியல் நெருக்கடிகளும் அவரை வாட்டின. அந்த முயற்சியில் அவர் எவ்வளவு தூரம் வெற்றி ஈட்டினார் என்பதை அவரது வாரிசுகள்தாம் இனிமேல் வெளிப் படுத்த வேண்டும்.
1960களில் தீயாய்ப் பரவிய திராவிட இயக்கங்களின் ஆரம்பம் முதலே, இளைஞனாகத் தன்னை இணைத்துக் கொண்டவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவனாக இருந்தபோதே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்று போராடிக் கைதாகிச் சிறை சென்றவர். எம்.ஜி. ஆர். ஆட்சியில் தமிழக மக்கள் தொடர்புத்துறையில் பிரதான அதிகாரியாகப் பணியாற்றியவர்.
ஈழத் தமிழர்களின் உரிமைக்கான எழுச்சிப் போராட்டமும், அதற்காகத் தலைவர் பிரபாகரனின் தலைமையில் திரண்ட போராளிகளின் ஒப்புயர்வற்ற தியாகமும் நடராஜன் மனதைக் கவர்ந்தன. உண்மை உணர்வோடு அந்தப் போராட்டத்தை நேசித்தார். போராளிகளுக்காகவும், ஈழத் தமிழ் மக்களுக்காகவும் குரல் எழுப்பினார்.
அந்தப் போராட்டப் பெருமையை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வந்து தரிசித்து, வணங்கிப் போற்றுவதற்கு ஓர் புனித ஆலயமாக ‘முள்ளிவாய்க்கால் முற்றம்’ என்ற பிரமாண்டத்தை நிறுவியிருக்கின்றார்.
ஈழத் தமிழருக்காய் குரல் எழுப்பிய அவர்களுக்காய் அழுது கொண்டிருந்த – ஓர் இதயம் அடங்கிப்போனது. அது புரியாமல் ‘சசிகலா கணவர் மரணம்’ என்ற அளவோடு நாம் அதனைச் செய்தியாக்கி நிற்கிறோம். நம் மண்ணுக்காக தங்கள் உயிரையும் உடலையும் ஆகுதியாக்கிய மாவீரர் களையே மறந்து விட்ட நமது சமூகம், நமக்காக அழுத ஓர் இதயத்தையா நினைவில் கொள்ளப்போகின்றது?