பீகார் மாநிலத்தில் கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான மற்றொரு வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்துக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது ராஷ்ரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவ் பீகார் மாநில முதலமைச்சராக இருந்த போது கால்நடை தீவன முறைகேட்டில ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் இதில் 3 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. முதல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும், 2-வது வழக்கில் 3½ ஆண்டுகளும், 3-வது வழக்கில் 15 ஆண்டும் லாலுவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்ட அவர் தற்போது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தும்கா கருவூலத்தில் இருந்து 3.13 கோடி ரூபா பணத்தை முறைகேடாக எடுத்தமை தொடர்பான வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், லாலுபிரசாத் உட்பட 13 பேர் குற்றவாளிகள் என கடந்த 19-ம் திகதி நீதிபதி தீர்ப்பு அளித்திருந்தார். இந்தநிலையில் அவர்களுக்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது