அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக் கோரி வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக பல்வேறு பொது அமைப்புக்களினால் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மன்னாரில் இன்று(24) சனிக்கழமை காலை சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து கையெழுத்து போராட்டத்தை மேற்கொண்டனர். மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகவும், மன்னார் பொது வைத்தியசாலை பிரதான வீதியிலும் இன்று சனிக்கிழமை (24) காலை மன்னாரில் உள்ள சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து குறித்த கையெழுத்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் மனைவி கடந்த மாதம் 15 ஆம் திகதி இயற்கை எய்திய நிலையில் அவர்களுடைய ஆண் மற்றும் பெண் பிள்ளைகளாகிய இருவரும் நிர்க்கதியாகியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த இரு பிள்ளைகளின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து குறித்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கோரிக்கை அடங்கிய கையெழுத்துக்கள் ஏற்பாட்டுக் குழுவினரினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.