குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
மூதுரில் ஏ.சீ.எப் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பதிலளிக்குமாறு அந்த நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டில் குறித்த நிறுவனத்தின் 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த படுகொலைகள் தொடர்பிலான விசாரணைகள் நடத்தப்பட்டு அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அந்த அமைப்பு மீளவும் கோரியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த படுகொலைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டதாக இராணுவமும், இராணுவம் மேற்கொண்டதாக தமிழீழ விடுதலைப் புலிகளும் அந்தக் காலத்தில் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கொலைகள் தொடர்பிலான விசாரணைகளில் எவ்வித முன்னேற்றமும் கிடையாது என அந்த நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது. இவ்வாறான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதற்கு விசேட நீதிமன்றமொன்றை நிறுவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.