குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்..
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முன்னாள் போராளிள் சிலருக்காக ஒதுக்கப்பட்ட வாழ்வாதார உதவிகள் கடந்த நான்கு மாதங்களாக வழங்கப்படாது உள்ளன. மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த உதவிகளை வழங்கும் ஏற்பாடு இடம்பெற்றது.
ஒவ்வொரு முன்னாள் போராளிக்கும் 40 ஆயிரம் ரூபா வீதம் இந்த உதவியை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. எனினும் அரச அதிபருக்கு நேரமின்மை காரணமாக இந்த உதவி வழங்கப்படாது உள்ளது. கடந்த நவம்பர் மாத இறுதிப்பகுதியில் இந்த உதவிகள் வழங்க முற்பட்ட வேளையில் தேர்தல் காரணமாக உதவி வழங்கும் நிகழ்வு பிற்போட்டப்பட்டது.
தேர்தல் முடிவடைந்து தற்போது ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியுள்ளது. எனினும் அரச அதிபருக்கு தொடர்ந்து நேரமின்மை ஏற்பட்டுள்ளமை காரணமாக முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வை நடாத்த முடியாதுள்ளதாக மாவட்ட செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் போராளிகள் பல்வேறு அரசியல், பொருளாதார, உளவியல் நெருக்கடிகளின் மத்தியில் வாழ்ந்து வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.