188
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
சாவகச்சேரி நகர தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிவமங்கை இராமநாதன் தெரிவானார். சாவகச்சேரி நகரசபை அமர்வு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் இன்று மதியம் ஆரம்பமானது. அதன் போது , தவிசாளர் தெரிவுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் சிவமங்கை இராமநாதனின் பெயர் பிரேரிக்கப்பட்டது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் யோகேஸ்வரன் ஜெயக்குமாரின் பெயர் பிரேரிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பிரேரிக்கப்பட்ட சிவமங்கை இராமநாதன் 12 வாக்குக்களை பெற்று சாவகச்சேரி நகர சபை தவிசாளராக பொறுப்பேற்றார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் பிரேரிக்கப்பட்ட யோகேஸ்வரன் ஜெயக்குமார் 6 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற பிரதி தவிசாளர் தெரிவின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பிரேரிக்கப்பட்ட அருணாசலம் பாலமயூரன் தெரிவு செய்யப்பட்டார். சாவகச்சேரி நகர சபைக்கு தமிழரசு கட்சி 05 உறுப்பினர்களும் , ஈழமக்கள் ஜனநாயக கட்சி 03 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 06 உறுப்பினர்களும் , ஐக்கிய தேசிய கட்சி 01 உறுப்பினரும் , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 02 உறுப்பினர்களும் தமிழர் சமூக ஜனநாயக கட்சி 01 உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love