சர்வதேச காவற்துறையினரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, டுபாயில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்திகளை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு நிராகரித்துள்ளது. நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியாலங்கார இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
நிதிக்குற்றப் விசாரணைப் பிரிவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே டுபாய் அதிகாரிகள் உதயங்க வீரதுங்கவை கைது செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
மிக் விமான கொடுக்கல் வாங்களின்போது 7.833 மில்லியன் டொலர்களை மோசடி செய்ததாக உதயங்க வீரதுங்க மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதோடு, கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.