சந்தேகத்தின் பேரில் கைதாகி நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்ட கனகரத்னம் ஆதித்யன் மற்றும் கந்தவனம் கோகுலநாத் ஆகியோரை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் உத்தரவிட்டுள்ளார்.
2009ம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக, இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இவர்களுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்களை முன் வைத்து, கடந்த 2011ம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
நீண்டகால விசாரணையின் பின்னர் இன்று தீர்ப்பை வழங்கிய நீதிபதி சம்பத் அபேகோன், கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக, சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்க முறைப்பாட்டாளர்களால் முடியவில்லை என தெரிவித்தார்.
அதன்படி சந்தேக நபர்களை நிபந்தனையின்றி விடுவிப்பதாக மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.