குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முல்லைத்தீவு ஆண்டான் குளபகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரின் துப்பாக்கியை இருவர் பறித்து சென்றமையால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. முல்லைத்தீவு குமுழமுனை ஆண்டான் குள வீதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு இராணுவத்தினர் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள போது அப்பகுதியால் வந்த இருவரை இராணுவத்தினர் மறித்து சோதனை செய்ய முற்பட்டு உள்ளனர். அதற்கு குறித்த இருவரும் எதிர்ப்பு தெரிவித்து இராணுவத்தினருடன் வாய்தர்க்கத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
பின்னர் திடீரென அங்கிருந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் ஏ.கே. 47 ரக துப்பாக்கியை பறித்துக்கொண்டு அங்கிருந்த காட்டு பாதை ஊடாக தப்பியோடியுள்ளார்கள். அதனை அடுத்து அப்பகுதியில் பெருமளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு அக் காட்டு பகுதி சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல்கள் நடாத்தப்பட்டது.
பின்னர் மறுநாள் இராணுவத்தினரால் முல்லைத்தீவு காவல் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டு நேற்று செவ்வாய்க்கிழமை இராணுவத்தினர் , காவல்துறையினர் மற்றும் காவல்துறை விஷேட அதிரடிப்படையினர் இணைந்து அப்பகுதிகளில் தேடுதல் நடத்தினார்கள். இதனால் அப்பகுதி மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டம் ஏற்பட்டது.
அந்நிலையில் துப்பாக்கியை பறித்து சென்றவர்கள் என அடையாளம் காணப்பட்ட இருவரையும் தெரிந்தவர்கள் எனப்படும் மூவரை பொலிசார் கைது செய்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதன் போது குறித்த மூவரில் ஒருவர் துப்பாக்கியை பறித்து சென்றவர்கள் என அடையாளம் காணப்பட்ட ஒருவருடன் தொலைபேசியில் உரையாடி துப்பாக்கி எங்கே மறைத்து வைக்கப்பட்டு உள்ளது என வினாவிய போது , துப்பாக்கி முறிப்பு வீதியில் உள்ள ஒரு பாலத்தின் கீழ் உள்ளது என கூறினார்.
அதனை அடுத்து அப்பகுதிக்கு சென்ற இராணுவத்தினர் துப்பாக்கியை மீட்டு சென்றனர். அதனை அடுத்து காவல்துறையினர் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் , துப்பாக்கியை பறித்து சென்றவர் என அடையாளம் காணப்பட்ட இருவரையம் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.