உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் கட்சி தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.
தீபக் மிஸ்ரா சக நீதிபதிகளுக்கு வழக்குகள் ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நால்வர் செய்தியாளர்களை சந்தித்து குற்றம் சுமத்தியிருந்தனர்.
இதனால் தீபக் மிஸ்ராவுக்கு எதிராக அப்போதே கண்டனக்குரல்கள் எழுந்திருந்த நிலையில் தீபக் மிஸ்ராவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாநிலங்களவையில் கொண்டு வரும் இந்த தீர்மானத்தை ஆதரிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து காங்கிரஸ் தலைவர்கள் வேண்டுகோள் விடுப்பதுடன், இதற்கான ஆதரவு கடிதத்திலும் கையெழுத்து வாங்கி வருகின்றனர். காங்கிரசின் இந்த முடிவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீதிபதி ஒருவரை பதவி நீக்குவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு, மாநிலங்களவை என்றால் 50 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும், மக்களவை என்றால் 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் தேவை. தீபக் மிஸ்ராவுக்கு எதிரான தீர்மானத்தை மாநிலங்களவையில் தாக்கல் செய்ய காங்கிரஸ் முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.