இஸ்ரோ ஜி.எஸ்.எல்.வி.- எப்8 ரொக்கெட் மூலம் இன்று மாலை ஜிசாட்-6ஏ செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தவுள்ளது. 3 நிலைகளை கொண்ட இந்த ஜி.எஸ்.எல்.வி- எப்8 ரொக்கெட்டில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு உள்ளது. 3-வது நிலையில் முழுவதும் உள்நாட்டில் இந்திய விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்ட என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது.
49.1 மீட்டர் உயரமும், 415.6 தொன் எடையும் கொண்ட இந்த ரொக்கெட்டில் 2,140 கிலோ எடை கொண்ட ஜிசாட்- 6ஏ செயற்கைகோள் அனுப்பப்படுகிறது. இது, பூமியில் இருந்து அதிகபட்சமாக 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரமும், குறைந்தபட்சமாக 170 கிலோ மீட்டர் தூரமும் கொண்ட சுற்றுப்பாதையில் பூமியைச் சுற்றிவர உள்ளது
இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும். அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோ மையத்தில் தகவல்தொடர்பு வசதிக்காக 6 மீட்டர் விட்டத்தில் மிகப்பெரிய அன்ரனா ஒன்றும் தயாரிக்கப்பட்டு செயற்கைகோளில் பொருத்தப்பட்டு உள்ளது.
இஸ்ரோ தயாரித்த அன்ரனாக்களிலேயே இது மிகவும் பெரியதாகும். தகவல் தொடர்பு மற்றும் காலநிலை மாற்றங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள இந்த செயற்கைகோள் பேருதவியாக அமையும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.