வேலணை பிரதேச சபை தவிசாளராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் நமசிவாயம் கருணாகரமூர்த்தி தெரிவாகியுள்ளார். உள்ளுராட்சி சபைகளுக்கான தவிசாளர் தெரிவு உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிறஞ்சன் தலைமையில் இன்று (29) வேலணைப் பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாவலனையும் , ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி கருணாகரமூர்த்தியையும் பிரேரித்தது. அதனை அடுத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது , 20 உறுப்பினர்களை கொண்ட வேலணை பிரதேச சபையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு எட்டு உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினருமாக ஒன்பது உறுப்பினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாவலனுக்கு ஆதரவளித்தனர்.
அதேவேளை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆறு உறுப்பினர்களும் , பொதுஜன பெரமுனவின் இரண்டு உறுப்பினர்களும் தமிழர் விடுதலை கூட்டணியின் ஒரு உறுப்பினருமாக ஒன்பது உறுப்பினர்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் கருணாகர மூரத்திக்கு ஆதரவளித்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் ஒருவரும் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி உறுப்பினர் ஒருவரும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
இரண்டு உறுப்பினர்களும் 09 வாக்குகளை பெற்று சமநிலை வகித்தமையால் இருவரில் ஒருவரை திருவுள சீட்டெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படுவர் என ஆணையாளர் அறிவித்தார். அதனை அடுத்து நடைபெற்ற சீட்டேடுப்பில் கருணாகர மூர்த்தி தெரிவாகி தவிசாளராக பொறுப்பேற்றார்.