நிர்மாணத் துறை மூலப்பொருட்களான கல், மண் மற்றும் மணல் ஆகியவற்றை பெற்றுக் கொள்வதற்கான அனுமதிப் பத்திரத்தை ஒரேயிடத்தில் வழங்குவதற்கான முறையொன்றினை விரைவில் தயாரிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
நிர்மாணத் துறையில் ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்றையதினம் ; ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி மேற்கண்ட ஆலோசனையினை வழங்கினார்.
கல், மண், மற்றும் மணல் ஆகியவற்றுக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்குவதை அரசாங்கம் நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்திகள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவற்றில் எந்தவித உண்மையுமில்லையென தெரிவித்தார்.
எனினும் கல், மண் மற்றும் மணல் என்பவற்றை பெற்றுக் கொள்ளல் கடத்தல் வியாபாரிகளினால் மேற்கொள்ளப்படும் முறைகேடுகளை தடுப்பதற்கு கடந்த காலத்தில் அரசாங்கம் பல தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் நிர்மாணத்துறைக்கு தேவையான மூலப் பொருட்களை பொருத்தமான இடங்களிலிருந்து பெற்றுக் கொள்வதற்கு எந்தவித தடைகளும் விதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் நிர்மாணத் துறைக்குத் தேவையான மூலப்பொருட்களை இடைத்தரகர்களின்றி நேரடியாக வழங்குவதற்கு உரிய நிறுவனங்களுக்கு அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கான முறையொன்றினை தயாரிக்குமாறும் ஜனாதிபதி இதன்போது சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தினார்.