குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கென்ய உள்துறை அமைச்சர் மற்றும் காவல்துறை மா அதிபருக்கு எதிராக நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. நீதிமன்றை அவமரியாதை செய்ததாகக் குற்றம் சுமத்தியே அவர்களுக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி அரசியல்வாதி ஒருவரை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை இருவரும் பின்பற்றத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உள்துறை அமைச்சர் பிரெட் மட்டியான்கீ மற்றும் காவல்துறை மா அதிபர் ஜோசப் பொய்னெட் ஆகியோருக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியுள்ளது. இந்த தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்ய உள்ளதாக அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கென்ய அரசாங்கம் இரண்டாவது தடவையாகவும் தம்மை நாடு கடத்தியதாக எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர் மிகுனா மிகுனா ( Miguna Miguna )தெரிவித்துள்ளார். அரசியல் காரணங்களுக்காக தம்மை இவ்வாறு நாடு கடத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
கென்யாவில் அரசாங்கத்திற்கும் நீதிமன்றக் கட்டமைப்பிற்கும் இடையில் கடுமையான முரண்பாட்டு நிலைமை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.