காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்முறையாக அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடு கடந்த வியாழக்கிழமையுடன் முடிவடைந்த போதும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை.
மாறாக, தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஸ்கீம் என்ற வார்த்தை காவிரி மேலாண்மை வாரியத்தைக் குறிக்கிறதா அல்லது வேறு ஏதேனும் அமைப்பைக் குறிக்கிறதா என உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, வியாழக்கிழமை தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தமிழக அரசு போதிய அழுத்தம் தராததாலேயே மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை என திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்தநிலையில் காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க இன்று திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகின்றது. காவிரி விவகாரம் குறித்து முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் இயற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருணாநிதி உடல் நலமின்றி ஓய்வெடுத்து வருவதன் காரணமாக முதல்முறையாக ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது