கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் காரைநகரில் ஒரு சுயேட்சைக் குழு மீன் சின்னத்தில் போட்டியிட்டது. விழிம்புநிலை மக்கள் மத்தியில் இருந்து தோன்றிய மேற்படி சுயேட்சைக் குழு பெரிய கட்சிகள் எதனோடும் சேர்ந்து போட்டியிடத் தயாராக இருக்கவில்லை. பெரிய கட்சிகள் கடந்த காலங்களில் தமது மக்களின் குறைகளைத் தீர்க்கவில்லை என்றும் குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகள் கூடப் பூர்த்தி செய்யப்படவில்லை என்றும் இச் சுயேட்சைக் குழு குற்றம் சாட்டியது. தேர்தலில் இக் குழுவிற்கு மூன்று ஆசனங்கள் கிடைத்தன. கூட்டமைப்புக்கும் மூன்று ஆசனங்கள் கிடைத்தன. ஏனைய கட்சிகள் அதை விட குறைவாகப் பெற்றன. யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லை. எனவே ஆட்சி அமைப்பதற்கு ஏனைய கட்சிகளோடு பேரம் பேச வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஈ.பி.டி.பி யைச் சந்தித்தபொழுது ‘எமது வாக்கு வங்கியைத் தான் நீங்கள் உடைத்தெடுத்து விட்டீர்கள் எனவே எங்களோடு இணைந்து விடுங்கள்’ என்ற தொனிப்பட அக்கட்சி கூறியிருக்கிறது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி இச் சுயேட்சைக் குழுவை எதிர்க்க மாட்டோம் என்று கூறியிருக்கிறது. மக்கள் முன்னணியிடம் ஒரு ஆசனம் மட்டுமே இருந்தது. ஆட்சி அமைக்க அது போதாது. எனவே தமிழ் தேசிய நிலைப்பாட்டிற்கு எதிரான கட்சிகளோடு கூட்டுச் சேராத வரை இச் சுயேட்சைக் குழுவை நாங்கள் ஆதரிப்போம் என்று அக்கட்சி கூறியிருக்கிறது.
கூட்மைப்போடு நான்கு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன. இச் சந்திப்புக்களில் மாவை, சிவாஜிலிங்கம், மாகாணசபை உறுப்பினர் சிவயோகன் போன்றோர் பங்கு பற்றியிருக்கிறார்கள். மாவையின் வீட்டில் இருதடவையும் மாட்டின் ரோட்டில் இரு தடவையும் இச் சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன. முடிவில் ஓர் உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது. முதலிரண்டு வருடங்கள் தவிசாளர் பதவி கூட்டமைப்பிற்கென்றும் அடுத்த இரண்டு வருடங்கள் தவிசாளர் பதவி இச்சுயேட்சைக் குழுவிற்கென்றும்; ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இவ்வுடன்படிக்கையைப் பகிரங்கப்படுத்துவது என்றும் முதலில் அந்த உடன்படிக்கையின் வரைபு ஒன்றைஎழுதுவது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட உடன்படிக்கை வரைபோடு கடந்த செவ்வாய்க்கிழமை சுயேட்சைக் குழுவினர் மாட்டின் ரோட் அலுவலகத்திற்குப் போயிருக்கின்றார்கள். ஆனால் அங்கே நிலமை தலைகீழாகக் காணப்பபட்டிருக்கிறது. இப்படி ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கு சிவாஜிலிங்கத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கவில்லை என்ற தொனிப்பட சிறீகாந்தா கூறியிருக்கிறார். நாங்கள் ஏனைய கட்சிகளோடு கதைத்துவிட்டோம் என்ற தொனிப்படவும் கூறப்பட்டிருக்கிறது. வேண்டுமானால் நிபந்தனைகளை முன் வைக்காமல் எங்களோடு இணையலாம் என்றும் கூறப்படுள்ளது. யாழ் வணிகர் சங்கத் தலைவர் ஜெயசேகரம் ‘சுமந்திரனை நம்புங்கள்’ என்று சுயேட்சைக்குழுவிற்குக் கூறியிருக்கிறார். ‘நான் ஏற்கனவே தவிசாளர் பதவி இன்னாருக்குத் தான் என்று வாக்களித்து விட்டேன்’ என்ற தொனிப்பட சிறீகாந்தா கூறியிருக்கிறார். இது எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பிரதேசம் இது தொடர்பில் நாங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்ற தொனி அவரிடம் காணப்பட்டதாம்.
இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டு மாவை பேசாமல் இருந்திருக்கிறார். ஒரு கட்சியின் தலைவராக அவர் மற்றவர்களை கட்டுப்படுத்த முயலவில்லையாம். சிறீகாந்தா கதைத்த விதம் தங்களை அவமதிப்பதாக இருந்தது என்றும் தங்களை சம தரத்தில் வைத்து அவர் பார்க்கவில்லை என்ற உணர்வு தங்களுக்கு ஏற்;பட்டது என்றும் சுயேட்சைக் குழுவினர் கூறுகிறார்கள். ஓர் உடன்படிக்கை எட்டப்பட்டதாக நம்ப வைத்து தாங்கள் உடன்படிக்கையைத் தயாரிப்பதில் கவனம் செலுத்திய காலப்பகுதிக்குள் கூட்டமைப்பானது ஏனைய கட்சிகளோடு பேரத்தை முடித்துவிட்டது என்று சுயேட்சைக் குழுவினர் குற்றம் சாட்டுகிறார்கள்.
முடிவில் தவிசாளர் தெரிவின் போது சுயேட்சைக் குழு கூட்டமைப்பிற்கு எதிராக தமது உறுப்பினரை நிறுத்தியது. கூட்டமைப்பானது ஈ.பி.டி.பி யு.என்.பி ஆகியவற்றின் ஆதரவோடு ஆட்சியை அமைத்திருக்கிறது. மக்கள் முன்னணி நடுநிலை வகித்திருக்கிறது. தேர்தலில் கூட்டமைப்போடு சேர்ந்து போட்டியிட விரும்பாத ஒரு பகுதி மக்கள் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின் உரிய பேரத்தோடு தன்னை நோக்கி வந்த போது அவர்களை அரவணைத்துக் கொள்ள கூட்டமைப்புத் தயாராக இருக்கவில்லை.
யாழ்ப்பாணத்தின் ஒதுக்குப் புறமாகவுள்ள ஓரு சிறிய பிரதேச சபையில் புதிதாக எழுச்சி பெற்ற அதே சமயம் விளிம்பு நிலை மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் ஓரு சுயேட்சைக் குழுவை கூட்டமைப்பு இவ்வாறு கையாண்டிருக்கிறது. இது ஏனைய பிரதேச சiபைகளில் அக்கட்சியானது எப்படி நடந்திருக்கும் என்பதற்கு ஒரு வகை மாதிரியாகும்.
தொங்கு சபைகளைக் கைப்பற்றப் போய் கூட்டமைப்பின் எதிர்காலம் தொங்கத் தொடங்கிவிட்டதா? உள்ளூர் அதிகாரத்தை கைப்பற்றுவது ஒன்று தான் கூட்டமைப்பின் ஒரே இலக்காகக் காணப்பட்டது. இதை மறு வளமாகக் கூறின் தனக்குச் சவாலாக எழுந்திருக்கும் மக்கள் முன்னணியைத் தோற்கடிப்பதற்காக யாருடைய ஆதரவையும் பெறலாம் என்று கூட்டமைப்பு முடிவெடுத்திருக்கிறது. இதில் ராஜதந்திரம் எதுவும் கிடையாது. அரசியல் நெழிவு சுழிவு எதுவும் கிடையாது. ஏனெனில் ராஜதந்திரத்தின் நோக்கம் என்பது கொள்கைவழி இலக்குகளை அடைவது தான். அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகக்கொள்கையைக் கைவிடுவது அல்ல. வடக்கில் இவ்வாறாக கூட்டுச் சேரலாம் என்றால் கிழக்கில் பிள்ளையானோடும் கூட்டுச் சேர வேண்டும்.
இவ்வாறு தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக்கொண்டிராத கட்சிகளின் ஆதரவை பெற்றதன் விளைவாகக் கூட்டமைப்பானது உடனடிக்கு உள்ளூர் அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறது. ஆனால் நீண்ட கால நோக்கில் அதன் வாக்கு வங்கியை இழக்கத் தொடங்கிவிட்டது. இச் சேர்க்கைளால் அதிகம் நன்மை அடையப் போவது ஈ.பி.டி.பி யும் தென்னிலங்கை மையக் கட்சிகளும் தான். ஏனெனில் கூட்டமைப்பின் வாக்கு வங்கியின் இதயமான பகுதி எனப்படுவது எதிர்ப்பு அரசியல் வாக்குகள்தான். ஆனால் ஈ.பி.டி.பி மற்றும் தென்னிலங்கை மையக் கட்சிகளின் வாக்குத் தளம் எனப்படுவது முழுக்க முழுக்க இணக்க அரசியல் வாக்குகளும் சலுகை அரசியல் வாக்குகளும் தான்.
கூட்டமைப்பானது கடந்த மூன்று ஆண்டுகளாக கிட்டத்தட்ட அரை இணக்க அரசியலை முன்னெடுத்தது. இதன் விளைவாகவே நடந்து முடிந்த தேர்தலில் தமது ஏகபோகம் சோதனைக்குள்ளாகியுள்ளது என்பதை அண்மையில் சம்பந்தன் ஒப்புக்கொண்டிருந்தார். சுழிபுரத்தில் அமிர்தலிங்கத்தின் சிலையை திறந்து வைத்து அவர் ஆற்றிய உரையில் அவர் பின்வருமாறு பேசியிருக்கிறார்….’1965 ஆம் ஆண்டு எமது கட்சி அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியது. 1965 இற்கும் 1970 இற்கும் இடையில் அரசாங்கத்தில் பங்காளிகளாக இருந்தோம்….. அந்தக் காலத்தில் தமிழரசுக் கட்சி ஒரு பலவீனத்தை அடைந்திருந்தது. அதே நிலைமையை இன்று பார்க்கின்ற பொழுது தமிழரசுக் கட்சி இப்போதைய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி வநத்து. இந்த அரசாங்கம் தான் ஆற்ற வேண்டிய கடமைகளை முழுமையாக ஆற்றாத காரணத்தின் நிமித்தம் மக்கள் மத்தியில் அதிருப்தி எற்பட்டிருந்தது. அந்த அதிருப்தியின் மூலமாக சமீபத்தில் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவ்வாறு கடந்த 70 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராமன்றத் தேர்தலிற்கும் தற்போது நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலிற்கும் ஒர் இணக்கப்பாட்டை நான் காண்கின்றேன்.’
இவ்வாறானதோர் பின்னணியில் முழு இணக்க அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளின் ஆதரவோடு பிரதேச சபைகளைக் கைப்பற்றும் போது கூட்டமைப்பின் எதிர்ப்பரசியல் தளம் மேலும் நலிவடையும். கூட்டமைப்பிற்கு வாக்களிப்பததால் பெறக் கூடிய சலுகைகளை நேரடியாக தென்னிலங்கை மையக் கட்சிகளுக்கே வாக்களிப்பதன் மூலம் பெற்று விடலாம் என்று ஒரு தொகுதி வாக்காளர்கள் நம்பத் தொடங்கி விடுவார்கள். அப்படி நம்பியவர்கள்தான் நடந்து முடிந்த தேர்தலில் அக்கட்சிகளுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.
கூட்டமைப்பின் உள்ளுராட்சி அணுகுமுறைகளை விக்கினேஸ்வரன் விமர்சித்திருக்கிறார். இணக்க அரசியலையும் ஈ.பி.டி.பி யையும் தனது ஜென்மப் பகைவர்களாகப் பார்க்கும் சிறீதரன் அதற்கெதிராகக் கருத்துத் தெரிவித்திருக்கிறார். ஆனால்; ஈ.பி.டி.பி யோடு நெருக்கமாக அடையாளம் காணப்பட்ட ஓர் அரசியல் செயற்பாட்டாளரான கோவை நந்தன் இது தொடர்பில் தனது முகநூலில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார். ‘த.தே.கூ. தனது கொள்கைகளை கைவிட்டு பதவிக்காக ஈ.பி.டி.பி யின் ஆதரவைபெற்று பிரதேச சபைகளில் ஆட்சி அமைத்துள்ளது என்கிறார் முதலமைச்சர் விக்கனேஸ்வரன்… அப்பிடி என்னய்யா வித்தியாசத்தை கண்டீர்கள் உங்கள் கட்சியினதும், ஈ.பி.டி.யினதும் கொள்கைக்கும் இடையில்…?’
இதில் ஓரளவிற்கு உண்மை உண்டு. கூட்டமைப்பின் உள்ளூர் ஆட்சிக்கொள்கை எனப்படுவது கடந்த கிழமைதான் தீடீரென்று தோன்றிய ஒன்று அல்ல. இரண்டாயிரத்து ஒன்பதிற்குப் பின்னிருந்து அக்கட்சித் தலைமை பின்பற்றிவரும் அணுகுமுறைககளின் தர்க்க பூர்வ வளர்ச்சியே அது. குறிப்பாக கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக அக்கட்சியானது படிப்படியாக ஓர் இணக்க அரசியல் தடத்திலேயே செயற்பட்டு வருகின்றது. 2009 ற்குப் பின்னிருந்து புலி நீக்கம் தேசிய நீக்கம் என்பவற்றின் தொடர்ச்சியாக இப்போது எதிர்ப்பு அரசியல் நீக்கம் என்ற ஒரு போக்கிற்குக்கிட்டவாக அக்கட்சி வந்துவிட்டதா?
தனது வாக்கு வங்கியில் ஏற்பட்ட சரிவிலிருந்து அக்கட்சியானது எதையுமே கற்றுக் கொள்ளவில்லை அதிகபட்சமாக எதிர்ப்பு அரசியற் பாரம்பரியத்தைக் கொண்ட கட்சியானது இணக்க அரசியல் போக்குடைய கட்சிகளின் ஆதரவில் தங்கியிருக்கும் போது அது அதன் எதிர்ப்பு அரசியல் வாக்குகளை இழக்க நேரிடும். இது அதன் தர்க்க பூர்வ விளைவாக எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளை மேலும் பலப்படுத்தும்.பதிலாக தமிழரசுக் கட்சியின் பிரதான வாக்குத் தளமாகக் காணப்படும் எதிர்ப்பு அரசியல் வாக்குகளை மேலும் இழக்க வேண்டி வரலாம். அது மட்டுமல்ல கட்சிக்குள்ளும் பிளவுகள் அதிகரிக்கலாம்.
ஆனால் அதற்காகசம்பந்தரும், சுமந்திரனும் அரசாங்கத்தோடான தமது இணக்க அரசியலை கைவிட முடியாது. ஏனெனில்அவ்விணக்க அரசியலிற்கு ஓர் அனைத்துலகப் பரிமாணமும் உண்டு. அவ்விணக்க அரசியலின் தொலைஇயக்கி வொஷங்டனிலும், புதுடில்லியிலும் இருக்கிறது. கூட்டரசங்காத்தைப் பாதுகாப்பதே அதை இயக்குபவர்களின் ஒரே நிகழ்ச்சி நிரலாகும். கூட்டரசாங்கத்தைப் பாதுகாப்பதென்றால் கூட்டமைப்பானது அரசாங்கத்தை ஏதோ ஒரு விதத்தில் பாதுகாக்கத்தான் வேண்டும். குறிப்பாக ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை முன்னகர்த்தும் அளவிற்கு நாடாளுமன்றத்தில் கூட்டரசாங்கம் பலவீனமாகக் காணப்படும் ஒரு பின்னணியில் கூட்டமைப்பின் ஆதரவு அரசாங்கத்திற்கு அவசியம்.
எனவே மேற்கு நாடுகளும், இந்தியாவும் கூட்டமைப்பை அரசாங்கத்தோடு சேர்ந்து நிற்கும்படியே அறிவுறுத்தும். சம்பந்தரும், சுமந்திரனும் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவர்களால் இப்போதைக்கு இணக்க அரசியல் பொறியை விட்டு வெளிவரலாமா என்பது சந்தேகமே. இவ்வாறானதோர் அரசியற் சூழலில்தான் இணக்க அரசியலை கொள்கையாகக் கொண்ட ஈ.பி.டி.பியின் ஆதரவையும், தென்னிலங்கைமையக் கட்சிகளின் ஆதரவையும் பெற்று உள்ளூராட்சி சபைகளை கூட்டமைப்புக் கைப்பற்றி இருக்கிறது. எனவே இதன் தர்க்கபூர்வ வளர்ச்சியானது கூட்டமைப்பை தொடர்ந்தும் இணக்க அரசியல் பாதையிலேயே உந்தித்தள்ளும். அதை முறித்துக் கொண்டு வெளியில் வருவதென்றால் அதற்கு துணிச்சலும், தீர்க்கதரிசனமும், கொள்கைப்பிடிப்பும், தியாகசிந்தையும் தமது மக்கள் மீது பேரன்பும் வேண்டும். இவ்வாறு கூட்டமைப்பானது மேலும் மேலும் இணக்க அரசியலை நோக்கி செல்லுமிடத்து அது அக்கட்சியை மேலும் மேலும் தமிழ்த்தேசிய நீக்கம் செய்யும்.
இதுஎதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கும் தரப்புக்களுக்கு அதிகம் சாதகமானது. விக்கினேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சுரேஸ் பிறேமச்சந்திரன் அணி, சிவகரன் அணி போன்றவற்றை நோக்கி தமிழ் எதிர்ப்பு அரசியல் வாக்குகள் திரளும். குறிப்பாக எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக மேற்கண்ட தரப்புக்கள் ஒரு பலமான எதிரணியைக் கட்டியெழுப்புமிடத்து கூட்டமைப்பின் வசமுள்ள தளம்பும் வாக்குகளும் எதிர்ப்பு வாக்குகளும் எதிரணியை நோக்கியே குவியும்.
சம்பந்தர் கூறும் சமஸ்டியும் விக்கினேஸ்வரன் கூறும் மக்கள் இயக்கமும் அவற்றின் பிரயோக நிலையில் ஒன்றுதான். சமஸ்டி என்ற இலக்கை நோக்கி யதார்த்தத்தை வளைப்பதற்கான எந்த ஒரு வேலைத்திட்டமும் சம்பந்தரிடம் கிடையாது. அதைப் போலவே பேரவையை ஒரு மக்கள் இயக்கம் என்று விக்கினேஸ்வரன் கூறுவதால் மட்டும் அது மக்கள் இயக்கமாக மாறிவிடாது. கனவிற்கும் யதார்த்தத்திற்குமிடையில் தமிழ் அரசியலானது கடும் உழைப்பை வேண்டி நிற்கின்றது. கடந்த தேர்தலில் அப்படி கடுமையாக உழைத்தபடியால் தான் மக்கள் முன்னணி அதன் வாக்குத் தளத்தை நான்கு மடங்காக பெருக்கிக் கொண்டது. ஆனால் அதன் அர்த்தம் அக்கட்சி;க்குக் கிடைத்தவை அனைத்தும் கொள்கை வாக்குகள் என்பதல்ல. கூட்டமைப்பின் மீதான விரக்தி வாக்குகளே அதில் அதிகம்.கூட்டமைப்பு விட்ட தவறுகளின் விளைவே இம்முறை வாக்குகள் சிதறக் காரணம். கரைநகரும் உட்பட பல பிரதேசங்களில் சுயேச்சைக் குழுக்கள் வெல்;வதற்கும்அதுதான் காரணம்.இனிமேலும் பிரதேச சபைகளில் ஆளும் கட்சியாக கூட்டமைப்பு விடக்கூடிய தவறுகளும் பலவீனமான சேர்க்கைகளால் ஏற்படக் கூடிய குழப்பங்களும்எதிர்ப்பு அரசியல் தரப்புக்களுக்குரிய வாக்குகளாய் மாறுமா? சில நாட்களுக்கு முன் கூட்டமைப்பின் இடைநிலைத் தலைவர் ஒருவர் என்னிடம் சொன்னது போல ‘நாங்களாகக் கொண்டு போய்ச் சனங்களைச் சைக்கிளில் ஏத்திவிட்டிருக்கிறோம்’ என்பது சரியா?