குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் 18 வயதை பூர்த்தி செய்யும் அனைவருக்கும் வரிக் கோவை ஒன்றை திறப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. அனைத்து பிரஜைகளுக்கும் வரிக் கோவை திறக்கப்பட்டாலும் வரிச் செலுத்துவதற்கான தேவைகளை பூர்த்தி செய்வோர் மட்டுமே வரிச் செலுத்த வேண்டுமென தெரிவித்துள்ளது. அத்துடன் புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டம் இன்று அமுல்படுத்தப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. உள்நாட்டு இறைவரிச் சட்டம் சில திருத்தங்களுடன் அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தனித் தனியாக வரி கோவையொன்று திறக்கப்பட உள்ளது. அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுவோர் உழைக்கும் போது செலுத்த வேண்டிய வரி குறித்த சட்டங்கள் இன்று முதல் மாற்றியமைக்கப்பட உள்ளது.
இதன்படி, வருடாந்த வருமானம் 7.5 லட்சம் ரூபா என்ற எல்லை நிர்ணயம் 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வருடாந்த வருமானம் 12 லட்சத்திற்கு அதிகமான முதல் 6 லட்சத்திற்கு 4 வீதமும், அதன் பின்னர் அதிகரிக்கப்படும் ஒவ்வொரு ஆறு லட்சத்திற்கும் முறையே 8, 12, 16, 20 மற்றும் 24 வீத வரி அறவீடு செய்யப்பட உள்ளது. இதற்கு முன்னதாக அதிகபட்சமாக 16 வீத வரியே அறவீடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கு மேலதிகமாக வருடாந்த வருமானம் 25.5 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு இதுவரையில் அறவீடு செய்யப்பட்ட வரி வீதம் 12 லிருந்து 24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.